இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்; 16 பேர் காயம்

இஸ்ரேலில் உயிரியியல் ஆராய்ச்சி மையம், ஆயுத தளவாட பகுதிகள் மற்றும் பல்வேறு கட்டுப்பாட்டு மையங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது.
டெல் அவிவ்,
ஈரான் மீது ஆபரேஷன் ரைசிங் லயன் என்ற பெயரில் கடந்த 13-ந்தேதி இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. ஈரானின் அணு ஆயுத பயன்பாட்டுக்கு எதிரான தாக்குதல் இது என இஸ்ரேல் தெரிவித்தது.
இதனை தொடர்ந்து ஈரானும் பதில் தாக்குதலில் ஈடுபட்டது. இதனால், 2 நாடுகள் இடையே போர் பதற்றம் அதிகரித்து உள்ளது. இந்நிலையில், ஈரானுக்கு எதிராக அமெரிக்காவும் போரில் இறங்கியுள்ளது. ஈரானின் பர்தவ், நடான்ஸ் மற்றும் எஸ்பஹான் ஆகிய 3 அணு உலைகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது.
இந்த தாக்குதல் பற்றி அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் வெளியிட்ட செய்தியில், ஈரான் மீது நடந்த தாக்குதல் வெற்றியடைந்து உள்ளது. உலகில் வேறு எந்த ராணுவமும் இதுபோன்று செய்தது இல்லை என தெரிவித்து உள்ளார்.
அணு உலைகள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியது ஈரானுக்கு ஆத்திரம் ஏற்படுத்தி உள்ளது. இதனால், அமெரிக்காவுக்கு முன் எப்போதும் இல்லாத வகையில் பேரழிவு காத்திருக்கிறது. அமெரிக்கா தொடங்கிய போரை நாங்கள் முடித்து வைப்போம் என ஈரான் நாட்டின் தலைவர் அயோத்துல்லா அலி காமேனி எச்சரிக்கை விட்டுள்ளார்.
இந்த சூழலில், இஸ்ரேலின் டெல் அவிவ், ஜெருசலேம், ஹைபா மற்றும் நெஸ் ஜியோனா ஆகிய நகரங்கள் மீது ஏவுகணைகளை வீசி ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது. இதில், 16 பேர் காயமடைந்து உள்ளனர்.
இதனால், இஸ்ரேலில் பொது மக்கள் பாதுகாப்பான பகுதிக்கு செல்லும்படி அறிவுறுத்தல் வழங்கப்பட்டு உள்ளது. இஸ்ரேலின் மத்திய பகுதியில் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடும் வகையில் சைரன் சத்தமும் ஒலிக்கப்பட்டது. இதேபோன்று, பென் குரியன் விமான நிலையம் உள்பட பல்வேறு தலங்களை இலக்காக கொண்டு தாக்குதல் நடந்துள்ளது.
இதுதவிர, உயிரியியல் ஆராய்ச்சி மையம், ஆயுத தளவாட தளங்கள் மற்றும் பல்வேறு கட்டுப்பாட்டு மையங்கள் உள்ளிட்ட பகுதிகளிலும் தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது.






