ஈரான் ஒருபோதும் போரை விரும்பியதில்லை: இந்தியாவுக்கான ஈரான் தூதர் பேட்டி

எங்களுக்கு எதிராக போரில் ஈடுபட்டால், அதன் முடிவு ஈரானின் கைகளிலேயே இருக்கும் என்று அவர் கூறினார்.

ஈரான் ஒருபோதும் போரை விரும்பியதில்லை:  இந்தியாவுக்கான ஈரான் தூதர் பேட்டி
Published on

புதுடெல்லி

ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி 28-ந்தேதி வான்வழியே கடுமையாக தாக்குதல் நடத்தியது. இதில், ஈரானில் ஆண்கள், பெண்கள் என இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதற்கு ஈரானும் பதிலடி கொடுத்து வருகிறது.

மேற்காசியாவில் காணப்படும் நீண்டகால மோதல் போக்கால், எரிபொருள் தட்டுப்பாடு, விலைவாசி உயர்வு, அத்தியாவசிய பொருட்களின் பற்றாக்குறை உள்ளிட்டவை பரவலாக அதிகரித்து காணப்படுகிறது. ஹார்மூஸ் ஜலசந்தியை ஈரான் மூடியதுடன், அதனை கடந்து செல்லும் எதிரி நாடுகளின் கப்பல்களை தாக்க கூடிய ஆபத்தும் காணப்படுகிறது.

இந்நிலையில், இந்தியாவுக்கான ஈரான் தூதர் முகமது பதலி இன்று கூறும்போது, பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் மற்றும் போரை முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என்று இந்தியா அழைப்பு விடுத்திருப்பது என்பது பாராட்டத்தக்க மற்றும் பொறுப்புணர்வுடன் கூடிய ஒன்றாகும். இந்த சூழ்நிலைகளில், இந்தியா போன்ற நாடுகளின் பங்கு அதிக முக்கியத்துவம் வாய்ந்தது என்று நாங்கள் நம்புகிறோம் என்றார்.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகளின் ராணுவம் மற்றும் அவர்களுடைய ஆக்கிரமிப்பு ஆகியவற்றை அனைத்து சுதந்திர நாடுகளும் மற்றும் விடுதலையை விரும்பும் நாடுகளும் பாகுபாடின்றி கண்டிக்க வேண்டும் என்று ஈரான் எதிர்பார்க்கிறது என்று சுட்டி காட்டினார்.

ஈரானின் இறையாண்மையை மீறி, பொதுமக்கள் மற்றும் பொதுமக்களின் உள்கட்டமைப்புகளான பள்ளிகள், பல்கலைக்கழகங்கள், மருத்துவமனைகள், குடியிருப்பு கட்டிடங்கள் மற்றும் பொருளாதார உள்கட்டமைப்பு உள்ளிட்டவற்றின் மீது அந்த நாடுகள் அத்துமீறி தாக்குதல்களை நடத்தியுள்ளன.

ஈரான் ஒருபோதும் போரை விரும்பியதில்லை. நாங்கள் ஒருபோதும் எந்த மோதலையும் தொடங்குவதில்லை என்றும் அவர் கூறினார். ஆனால், எங்களுக்கு எதிராக போரில் ஈடுபட்டால், அதன் முடிவு ஈரானின் கைகளிலேயே இருக்கும். இன்று நடந்து வருவது, வெளிநாட்டினரின் ஆக்கிரமிப்புக்கு எதிராக சட்டபூர்வ முறையிலான சுய பாதுகாப்பே ஆகும் என்றும் அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com