ஈரானில் பெட்ரோல் விலை திடீர் உயர்வு -நாடு முழுவதும் போராட்டம் வெடித்தது

ஈரானில் பெட்ரோல் விலை 3 மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் நாடு முழுவதும் போராட்டம் வெடித்து உள்ளது.
ஈரானில் பெட்ரோல் விலை திடீர் உயர்வு -நாடு முழுவதும் போராட்டம் வெடித்தது
Published on

தெஹ்ரான்,

2018-ல் அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகியதில் இருந்து ஈரான் எண்ணெய் ஏற்றுமதியில் கடுமையான தடைகளை எதிர்கொள்கிறது.

எண்ணெய் வளம் மிக்க நாடான ஈரானில் பெட்ரோல் விலை 3 மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் மானிய முறைகளிலும் கடுமையான கட்டுப்பாடுகளை ஈரான் அரசு விதித்துள்ளது. ஒரு காருக்கு மாதம் 60 லிட்டர் பெட்ரோல் மட்டுமே வழங்கப்படும். அந்த அளவுக்கு மேல் வாங்க வேண்டுமானால் அதற்கு இருமடங்கு விலை தர வேண்டும்.

பெட்ரோல் மீதான மானியங்களை நீக்குவதன் மூலம் கிடைக்கும் வருவாய் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு உதவி செய்ய பயன்படுத்தப்படும் என்று அரசு கூறுகிறது.

இதன் காரணமாக நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்துள்ளன. தலைநகர் தெஹ்ரான் உள்பட நாட்டின் முக்கிய நகரங்களில் பொதுமக்கள் நள்ளிரவில் போராட்டங்களில் ஈடுபட்டனர். இதையடுத்து அங்கு வந்த போலீசார் பொதுமக்களை கலைந்து செல்லுமாறு உத்தரவிட்டனர். பொதுமக்கள் கலைந்து செல்லாததால் கண்ணீர்ப்புகை குண்டுகளை வீசி கலையச் செய்தனர்.

மத்திய ஈரானின் சிர்ஜானில் நேற்று இரவு ஒரு எரிபொருள் சேமிப்புக் கிடங்கைத் தாக்கி மக்கள் அதற்கு தீ வைக்க முயன்றனர். தடுக்க முயன்ற பாதுகாப்பு படையினருக்கும் பொதுமக்களுக்கும் மோதல் ஏற்பட்டது.

மஷாத், பிர்ஜந்த், அஹ்வாஸ், கச்சரன், அபாடன், கோராம்ஷஹர், மஹ்ஷாஹர், ஷிராஸ் மற்றும் பந்தர் அப்பாஸ் உள்ளிட்ட பிற நகரங்களிலும் போராட்டங்கள் வெடித்து உள்ளன.

ஈரானின் இரண்டாவது பெரிய நகரமான மஷாத்தில், கோபமடைந்த நூற்றுக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் தங்கள் கார்களை சாலைகளில் நிறுத்தி போராட்டம் நடத்தினர்.

ஈரானிய அரசாங்கத்திற்கும், அதன் பிராந்தியக் கொள்கைகளுக்கும் எதிராக சில கோஷங்கள் எழுப்பப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com