ஈரானில் அரசுக்கு எதிராக தொடரும் போராட்டம்: 51 பேர் பலி

போராட்டத்தில் ஈடுபட்டுவரும் பொதுமக்கள் கமேனி அரசுக்கு எதிரான கோஷங்களை எழுப்பி வருகின்றனர்.
தெஹ்ரான்,
ஈரானில் கடும் பொருளாதார நெருக்கடி, விலைவாசி உயர்வு உள்பட பல்வேறு காரணங்களால் அந்நாட்டு உச்ச தலைவர் அயத்துல்லா அலி கமேனிக்கு எதிராக கடந்த மாதம் 28ம் தேதி முதல் மக்கள் போராட்டம் நடைபெற்று வருகிறது. போராட்டத்தில் ஈடுபட்டுவரும் பொதுமக்கள் கமேனி அரசுக்கு எதிரான கோஷங்களை எழுப்பி வருகின்றனர். மேலும், அரசு கட்டிடங்களுக்கு தீ வைக்கும் சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன.
அதேவேளை, போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்களை ஒடுக்கும் நடவடிக்கையில் கமேனி தலைமையிலான ஈரான் அரசு தீவிரம் காட்டி வருகிறது. போராட்டக்காரர்களை சுட்டுக்கொல்லும் சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன.
இந்நிலையில், ஈரானில் நடைபெற்றுவரும் போராட்டத்தில் இதுவரை 51 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில், பாதுகாப்புப்படையினர் 21 பேர், 9 குழந்தைகளும் அடக்கம் என தகவல் வெளியாகியுள்ளது. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பாதுகாப்புப்படையினர் நடத்திய தாக்குதலில் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர். மேலும், போராட்டத்தில் ஈடுபட்டதாக இதுவரை 2 ஆயிரத்து 300 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.






