

டெஹ்ரான்,
ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேல் போரினால் உயர்ந்துள்ள எண்ணெய் விலைகளைக் குறைக்கும் முயற்சியாக, அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தலைமையிலான நிர்வாகம், கடல் வழியாக ஈரானின் கச்சா எண்ணெயை கொள்முதல் செய்வதற்கான தடைகளை 30 நாட்களுக்கு தளர்த்தி உள்ளது.
இதுதொடர்பாக அமெரிக்க கருவூல செயலாளர் பெசென்ட் வெளியிட்டிருந்த பதிவில், “உலகளாவிய பயங்கரவாதத்தின் தலையாக ஈரான் விளங்குகிறது. ஜனாதிபதி டிரம்பின் 'ஆபரேஷன் எபிக் பியூரி' நடவடிக்கை மூலம், நாம் எதிர்பார்த்ததை விடவும் மிக வேகமாக இந்த முக்கியமான போராட்டத்தில் வெற்றி பெற்று வருகிறோம். உலகளாவிய எரிசக்தி உள்கட்டமைப்புக்கு எதிரான ஈரானின் பயங்கரவாதத் தாக்குதல்களுக்குப் பதிலளிக்கும் விதமாக, உலகிற்கான எரிசக்தி விநியோகத்தை அதிகரிக்கவும், உலகளாவிய விநியோகத்தை வலுப்படுத்தவும், சந்தை நிலைத்தன்மையை உறுதிப்படுத்தவும் டிரம்ப் நிர்வாகம் அமெரிக்காவின் பொருளாதார மற்றும் ராணுவ வலிமையை தொடர்ந்து பயன்படுத்தும்.
தற்போது கடலில் தேங்கியுள்ள ஈரானின் எண்ணெயை விற்பனை செய்ய அனுமதிப்பது மற்றும் குறுகிய கால அங்கீகாரத்தை வழங்கி உள்ளது. உலகிற்கான இந்த தற்போதைய விநியோகத்தால், 14 கோடி பீப்பாய் கச்சாய் எண்ணெயை உலக சந்தைகளுக்கு விரைவாக கொண்டு வரப்படும். இதுவரை, 440 மில்லியன் கூடுதல் பீப்பாய் எண்ணெயை உலக சந்தைக்குக் கொண்டுவர டிரம்ப் நிர்வாகம் பணியாற்றி வருகிறது. டிரம்பின் எரிசக்தி ஆதரவுத் திட்டம், அமெரிக்க எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தியை உயர்த்தியுள்ளது. இது எரிசக்தி பாதுகாப்பை வலுப்படுத்தி, எரிபொருள் செலவுகளையும் குறைத்துள்ளது. இப்போது ஏற்படும் எந்தவொரு குறுகிய கால இடையூறும் இறுதியில் அமெரிக்கர்களுக்கு நீண்ட காலப் பொருளாதார ஆதாயங்களாக மாறும்”என்று தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் அமெரிக்காவின் இந்த அனுமதியால் கப்பல்களில் உள்ள 14 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் சந்தைக்கு வரும் என தகவல் வெளியாகி இருந்தது.
இந்நிலையில் அமெரிக்காவின் இந்த சலுகையை ஈரான் நிராகரித்துள்ளது. இதன்படி சர்வதேச சந்தைக்கு கூடுதல் கச்சா எண்ணெயை வழங்குவதற்கு தங்களிடம் கையிருப்பு ஏதுமில்லை என ஈரான் அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக மும்பையில் உள்ள ஈரான் தூதரகம் வெளியிட்ட அறிக்கையில், "தற்போது, சர்வதேச சந்தைகளுக்கு ஈரானிடம் புழக்கத்தில் உள்ள கச்சா எண்ணெயோ அல்லது உபரி எண்ணெயோ கையிருப்பில் இல்லை. அமெரிக்க கருவூலச் செயலாளரின் கருத்துக்கள், வாங்குபவர்களுக்கு உறுதியளிப்பதையும், சந்தை மனநிலையை நிர்வகிப்பதையும் நோக்கமாகக் கொண்டதாக மட்டுமே தெரிகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விலை உயர்வை கட்டுப்படுத்த, கடலில் முடங்கியுள்ள ஈரானிய எண்ணெய் மீதான தடைகளை 30 நாட்களுக்கு நீக்குவதாக அமெரிக்கா அறிவித்த நிலையில், ஈரான் அரசு அச்சலுகையை நிராகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேற்கு ஆசிய மோதல் நான்காவது வாரத்தில் நுழையவிருக்கும் நிலையில், கச்சா எண்ணெய் விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளது. ஏற்கனவே உலக அளவில் நிலையற்ற சந்தை ஏற்பட்டுள்ளநிலையில், ஈரானின் இந்த மறுப்பு மேலும் பதற்றமடைய செய்துள்ளது.