ஈரான் சுதந்திரம் தேடி அலைகிறது; அமெரிக்கா உதவ தயார் - டிரம்ப்


ஈரான் சுதந்திரம் தேடி அலைகிறது; அமெரிக்கா உதவ தயார் - டிரம்ப்
x
தினத்தந்தி 11 Jan 2026 12:09 PM IST (Updated: 11 Jan 2026 1:51 PM IST)
t-max-icont-min-icon

ஈரான் மக்களை காக்க அரசுக்கு எதிராக நாங்களும் துப்பாக்கி சூடு நடத்த வேண்டியிருக்கும் என டிரம்ப் கூறினார்.

வாஷிங்டன் டி.சி.,

ஈரான் நாட்டில் அரசுக்கு எதிரான மக்களின் போராட்டம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 28-ந்தேதி தொடங்கியது. அதிகரித்து வரும் பணவீக்கம், அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி உயர்வு, பொருளாதார தேக்கநிலை ஆகியவற்றால் மக்களிடையே கொந்தளிப்பு ஏற்பட்டு உள்ளது.

இதனால், அரசுக்கு எதிரான மக்கள் போராட்டம் தீவிரமடைந்து உள்ளது. மாகாணங்கள், நகரங்கள் என பல்வேறு பகுதிகளிலும் மக்கள் தெருக்களில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 2 வாரங்களாக நடந்து வரும் இந்த ஆர்ப்பாட்டம் இன்றும் நீடிக்கிறது.

அவர்களை ஒடுக்கவும், ஆர்ப்பாட்டக்காரர்களை அடக்கும் முயற்சியாகவும் பாதுகாப்பு படையினரை அரசு இறக்கி விட்டு உள்ளது. இதன்படி போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர். ஈரானின் 31 மாகாணங்களில் 100 நகரங்களில் போராட்டம் தீவிரமடைந்து உள்ளது.

நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இணையதள சேவை முடக்கி வைக்கப்பட்டு உள்ளது. இதனால், ஈரானில் நடக்கும் விசயங்கள் வெளியுலகிற்கு சரிவர தெரியாத வகையில் நிலைமை உள்ளது. சில அரசு ஊடகங்கள் மட்டுமே செயல்பட அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.

ஈரானில் அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் 116 பேர் பலியாகி இருக்க கூடும் என அமெரிக்காவை அடிப்படையாக கொண்ட மனித உரிமைகள் அமைப்பு ஒன்று தெரிவித்து உள்ளது.

இந்நிலையில், டிரம்ப் வெளியிட்ட செய்தியில், இதற்கு முன் காணாத வகையில், சுதந்திரம் வேண்டும் என தேடி ஈரானில் மக்கள் அலைகின்றனர். அதற்கு உதவ அமெரிக்கா தயார் நிலையில் நிற்கிறது என தெரிவித்து உள்ளார்.

அவர் தொடர்ந்து கூறும்போது, ஈரானை கவனித்து வருகிறோம். அவர்கள் மக்களை சரிவர நடத்தவில்லை என தெரிகிறது. அதனாலேயே அரசுக்கு எதிராக போராடுகிறார்கள். நீங்கள் மக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்த கூடாது. மீறினால், ஈரான் மக்களை காக்க அரசுக்கு எதிராக நாங்களும் துப்பாக்கி சூடு நடத்த வேண்டியிருக்கும் என கூறினார்.

அமெரிக்க வெளியுவு துறை மந்திரி மார்கோ ரூபியோ கூறும்போது, ஈரானின் துணிச்சல் மிகுந்த மக்களுக்கு அமெரிக்கா ஆதரவளிக்கிறது என கூறினார். இதனை வரவேற்கிறேன் என கூறிய குடியரசு கட்சியின் செனட் உறுப்பினரான லிண்ட்சே கிரஹாம், இது ஒபாமா நிர்வாகம் அல்ல. ஈரானுக்கு எதிராக போராடும் அந்நாட்டின் சிறந்த குடிமக்களுக்கு எதிரான கொடூர தாக்குதல் முறியடிக்கப்படும். ஈரானை மீண்டும் சிறந்த நாடாக்குவோம் என கூறினார்.

1 More update

Next Story