அணுசக்தி ஒப்பந்த பேச்சுவார்த்தைக்கு மத்தியில் யுரேனியம் செறிவூட்டலை 60 சதவீதமாக உயர்த்தியது ஈரான்

2015-ம் ஆண்டு ஈரானுக்கும், அமெரிக்கா உள்ளிட்ட 6 வல்லரசு நாடுகளுக்கும் இடையில் அணு சக்தி ஒப்பந்தம் கையெழுத்தானது.
அணுசக்தி ஒப்பந்த பேச்சுவார்த்தைக்கு மத்தியில் யுரேனியம் செறிவூட்டலை 60 சதவீதமாக உயர்த்தியது ஈரான்
Published on

இந்த ஒப்பந்தம் அமெரிக்க நலன்களுக்கு எதிரானது என கூறிய அப்போதைய ஜனாதிபதி டிரம்ப் கடந்த 2018-ம் ஆண்டு இந்த ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்காவை விலக்கிக்கொண்டார். மேலும் ஈரான் மீது கடுமையான பொருளாதாரத் தடைகளையும் விதித்தார். இதனால் கோபமடைந்த ஈரான் ஒப்பந்தத்தின் விதிமுறைகளை மீறி யுரேனியம் செறிவூட்டலை 20 சதவீதமாக அதிகரித்தது.

இந்த சூழலில் அமெரிக்காவில் தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டு புதிய ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள ஜோ பைடன் அணுசக்தி ஒப்பந்தத்தில் மீண்டும் இணைவதற்கு விருப்பம் தெரிவித்து அதற்கான முயற்சிகளில் இறங்கியுள்ளார். இதனிடையே அணுசக்தி ஒப்பந்தத்தை பாதுகாப்பது தொடர்பாக அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட அமெரிக்கா அல்லாத நாடுகளிடையே ஆஸ்திரியா தலைநகர் வியன்னாவில் அண்மையில் பேச்சுவார்த்தை தொடங்கியது. இதில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே மறைமுக பேச்சுவார்த்தையும் நடந்தது.

இந்த சூழலில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஈரானின் அணு உலையில் பயங்கர வெடி விபத்து நேரிட்டது. இது இஸ்ரேலின் பயங்கரவாத தாக்குதல் என குற்றம் சாட்டிய ஈரான் இதற்கு பதிலடியாக யுரேனியம் செறிவூட்டலை 60 சதவீதமாக உயர்த்தப்போவதாக தெரிவித்தது. இந்த நிலையில் 60 சதவீதம் வரை யுரேனியம் செறிவூட்டும் பணியை தொடங்கிவிட்டதாக ஈரான் அரசு நேற்று அறிவித்தது. ஈரானின் இந்த அதிரடி நடவடிக்கை ஆஸ்திரியா தலைநகர் வியன்னாவில் நடந்து வரும் பேச்சுவார்த்தைக்கு முட்டுக்கட்டையாக அமையும் என்று கருதப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com