

ஜெருசலேம்,
ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் தொடர் தாக்குதலை நடத்தி வருகின்றன. இந்த போரில் இஸ்ரேல் முன்னெப்போதும் இல்லாத வகையில் வலிமையாக இருப்பதாக அந்த நாட்டு பிரதமர் நேட்டன்யாகு நேற்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.அப்போது அவரிடம், ஈரானின் புதிய உச்சத் தலைவர் மொஜ்தபா கமேனி மற்றும் ஹிஸ்புல்லா தலைவர் நயீம் காசேம் ஆகியோரை இஸ்ரேல் குறிவைத்திருக்கிறதா? என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் பதிலளிக்கையில், “எந்த பயங்கரவாத தலைவருக்கும் நான் ஆயுள் காப்பீடு பாலிசி எடுக்கமாட்டேன்” என தெரிவித்தார். இதன் மூலம் ஈரானின் புதிய உச்சத் தலைவரையும் இஸ்ரேல் குறிவைத்திருப்பது தெரியவந்துள்ளது.
ஈரானில் உச்சத் தலைவரை படுகொலை செய்துள்ள நிலையில், இனி அங்கு புதிய அரசு அமைவதற்கு அந்த நாட்டு மக்கள்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறிய நேட்டன்யாகு, “தாகமாக இருக்கும் ஒருவருக்கு நீரை காட்டத்தான் முடியும்; அவரை குடிக்க வைக்க முடியாது” என்றும் தெரிவித்தார்.இதனால் ஈரானின் புதிய உச்சத் தலைவரையும் இஸ்ரேல் குறிவைத்து இருப்பதாக சர்வதேச நோக்கர்கள் கூறும் நிலையில், மொஜ்தபா கமேனியின் உடல்நிலை குறித்தும் பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.அயத்துல்லா கமேனி உயிரிழந்த அதே தாக்குதலில் அவரது மகன் மொஜ்தபா கமேனியும் படுகாயமடைந்து கோமா நிலையில் இருப்பதாக பிரிட்டன் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
மொஜ்தபா கமேனிக்கு ஒரு கால் துண்டிக்கப்பட்டதுடன், கல்லீரல் பகுதியில் கடும் சேதம் ஏற்பட்டுள்ளது. தற்போது டெஹ்ரானில் உள்ள சினா மருத்துவப் பல்கலைக்கழக மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இஸ்லாமிய புரட்சிகர ராணுவப் படையின் பிரிவுகள் தனித்தனி கட்டுப்பாட்டில் செயல்பட்டு, போர் நடவடிக்கைகளை தொடர்ந்து நடத்தி வருகின்றன என்று அதில் கூறப்பட்டுள்ளது.