ஹிஜாப் எதிர்ப்பு போராட்டத்திற்கு ஆதரவு: உலகக்கோப்பையில் தேசிய கீதத்தை பாடாமல் நின்ற ஈரான் வீரர்கள்

ஈரான் நாட்டில் ஹிஜாப் அணிவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
Image Courtesy: Reuters
Image Courtesy: Reuters
Published on

தோஹா,

இஸ்லாமிய மத சட்டங்களை கடுமையாக பின்பற்றி வரும் ஈரானில் பெண்கள் மற்றும் 9 வயதிற்கு மேற்பட்ட சிறுமிகள் இஸ்லாமிய மத உடையான ஹிஜாப் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, அந்நாட்டின் தெஹ்ரானில் ஹிஜாப் சரியாக அணியவில்லை என கூறி போலீசார் நடத்திய தாக்குதலில் கோமா நிலைக்கு சென்ற 22 வயதான மாஷா அமினி என்ற இளம்பெண் கடந்த செப்டம்பர் மாதம் 17-ம் தேதி உயிரிழந்தார்.

ஹிஜாப் சரியாக அணியவில்லை என கூறு போலீசார் தாக்கியதில் இளம்பெண் மாஷா உயிரிழந்த சம்பவத்தை கண்டித்து ஈரான் முழுவதும் பெண்கள் போராட்டத்தில் குதித்தனர். ஹிஜாப்பை கழற்றி வீசியும், ஹிஜாப்பை தீ வைத்து எரித்தும் பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டம் நாட்டின் பல நகரங்களுக்கு பரவி வருகிறது.

ஹிஜாப் எதிர்ப்பு போராட்டக்காரர்களை ஒடுக்க ஈரான் அரசு கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது. ஆனால், நாட்டின் பல்வேறு மாகாணங்களில் ஈரான் அரசுக்கு எதிராகவும், ஹிஜாப் ஆடை கட்டுப்பாட்டிற்கு எதிராகவும் போராட்டம் தொடர்ந்து வருகிறது. பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளும் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியும், தடியடி, கண்ணீர் புகைகுண்டு வீசியும், கைது நடவடிக்கையிலும் ஈடுபட்டு வருகின்றனர். பாதுகாப்பு படையினர் தாக்கியதில் போராட்டக்காரர்கள் பலர் உயிரிழந்துள்ளனர். அந்த வகையில் ஹிஜாப் எதிர்ப்பு போராட்டக்காரர்கள் மீது ஈரான் பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் குழந்தைகள் உள்பட 320-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ஈரானின் பல நகரங்களில் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், 2022 உலகக்கோப்பை கால்பந்து தொடர் கத்தார் நாட்டில் நடைபெற்று வருகிறது. கால்பந்து தொடரில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் ஈரான் - இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன.

இப்போட்டி துவங்குவதற்கு முன்பாக இரு நாடுகளில் தேசிய கீதங்களும் இசைக்கப்பட்டது. அதில், ஈரான் நாட்டின் தேசிய கீதம் இசைக்கப்பட்ட போது அந்நாட்டின் வீரர்கள் யாரும் தேசிய கீதத்தை பாடவில்லை. ஈரான் வீரர்கள் அனைவரும் தங்கள் வாயை அசைக்காமல் அப்படியே நின்றனர்.

ஈரானில் போராட்டக்காரர்கள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுத்தும் வரும் நிலையில் ஈரான் அரசுக்கு எதிரான நிலைப்பாட்டை வெளிப்படுத்தவே உலகக்கோப்பையின் போது தேசிய கீதம் இசைக்கப்பட்டபோது வீரர்கள் யாரும் பாடவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.

ஹிஜாப் அணிவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் அரசுக்கு எதிராகவும் ஈரானில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் உலகக்கோப்பை போட்டியின் போது ஈரான் கால்பந்து வீரர்கள் தேசிய கீதத்தை பாடாமல் நின்றது தற்போது பேசுபொருளாகியுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com