

டெஹ்ரான்,
ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து கடந்த2018-ம் ஆண்டு அமெரிக்கா வெளியேறியது. அப்போது முதல் இரு நாடுகளுக்கும் இடையே கடும் மோதல் நீடிக்கிறது. அதே வேளையில் அணுசக்தி ஒப்பந்தத்தை புதுப்பிக்க விரும்பும் அமெரிக்கா இது தொடர்பாக ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்த முனைப்பு காட்டி வருகிறது.
இதனிடையே பல மாத இழுபறிகளுக்கு பின்னர் ஈரானுக்கும், அணுசக்தி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட அமெரிக்கா அல்லாத மற்ற நாடுகளுக்கும் இடையில் ஆஸ்திரியா தலைநகர் வியன்னாவில் வரும் 29-ந் தேதி மீண்டும் நேரடி பேச்சு வார்த்தை தொடங்க உள்ளது. இந்த பேச்சுவார்த்தையில் அமெரிக்கா மறைமுகமாக பங்கேற்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தநிலையில் அணு சக்தி ஒப்பந்தத்தை புதுபிக்க விரும்பினால் தங்கள் நாட்டின் மீது விதித்துள்ள பொருளாதார தடைகளை அமெரிக்கா நீக்க வேண்டும் என ஈரான் எச்சரித்துள்ளது.
இது குறித்து ஈரான் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் சயீத் கதிப்சாதே கூறுகையில் அமெரிக்கா அணு சக்தி ஒப்பந்தத்தில் உறுப்பினராக இல்லை என்பதையும், ஒப்பந்தத்தின் மற்ற உறுப்பினர்களிடமிருந்து இந்த ஒப்பந்தத்தின் கீழ் எதையும் கேட்க முடியாது என்பதையும் அமெரிக்கா அறிந்து கொள்ள வேண்டும். அணு சக்தி ஒப்பந்தத்துக்கு அமெரிக்கா திரும்புவதற்கான பாதை தெளிவாக உள்ளது. ஒப்பந்தம் சிதைந்து போனதில் அவர்கள் தங்கள் குற்றத்தை ஒப்புக் கொள்ள வேண்டும். அதோடு ஈரான் மீது விதித்துள்ள அனைத்து பொருளாதார தடைகளையும் ஒரே நேரத்தில் அமெரிக்கா நீக்க வேண்டும் என கூறினார்.