அமெரிக்கா மீண்டும் தாக்கினால் கடும் விளைவுகள் ஏற்படும்: ஈரான் எச்சரிக்கை

நாங்கள் ஒன்றும் முற்றுகையிட்டு முடக்குவதற்கு கியூபா அல்ல. அடிபணிய வைப்பதற்கு வெனிசுலாவும் அல்ல என்று ஈரான் தெரிவித்துள்ளது.
அமெரிக்கா மீண்டும் தாக்கினால் கடும் விளைவுகள் ஏற்படும்: ஈரான் எச்சரிக்கை
Published on: 

டெஹ்ரான்:

அமெரிக்கா மீண்டும் தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுப்பதற்காக காத்திருக்க மாட்டோம் என்று ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து ஈரான் துணை வெளியுறவு மந்திரி காசெம் கரிபாபாடி கூறியதாவது:

அமெரிக்காவுடனான உறவில் ராஜதந்திர பேச்சுவார்த்தை, பொருளாதார முற்றுகை, ராணுவ தாக்குதல் என 3 வகையான சூழ்நிலைகளையும் எதிர்கொள்ள ஈரான் தயாராக உள்ளது. அமெரிக்கா மீண்டும் ஒரு ராணுவ நடவடிக்கையை மேற்கொள்வதற்காக ராஜதந்திர பேச்சுவார்த்தைகளை பயன்படுத்தி கால அவகாசம் பெற முயற்சிக்கலாம் என சந்தேகிக்கிறோம். அமெரிக்கா தாக்குதல் நடத்தினால் ஈரான் அமைதியாக இருக்காது. அமெரிக்கா முதலில் தாக்குதல் நடத்தும் வரை காத்திருக்க மாட்டோம்.

போர் நிலையில்தான் உள்ளது

ஈரான் ஒன்றும் முற்றுகையிட்டு முடக்குவதற்கு கியூபா அல்ல. அடிபணிய வைப்பதற்கு வெனிசுலாவும் அல்ல. வான்வழி அல்லது தரைவழி முற்றுகைகள் மூலம் அமெரிக்க படைகளால் இதுவரை வெற்றி பெற முடியவில்லை. ஈரானின் புரட்சிகர பாதுகாப்புப் படை , தொலை தூர இலக்குகளை தாக்கும் திறன் கொண்ட ஏவுகணைகளை உருவாக்கி வருகிறது.தற்போதைய சூழ்நிலையை போரும் இல்லாமல், அமைதியும் இல்லாமல் இருப்பதாக கூற முடியாது. சட்டரீதியாக பார்த்தால் ஈரான் இன்னும் போர் நிலையில்தான் உள்ளது.

ஆய்வுக்கு அனுமதி அளிக்கப்படாது

ஈரானின் அணுசக்தி நிலையங்களை சர்வதேச அணுசக்தி முகமைஆய்வு செய்வதற்கும் நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. போர் நிரந்தரமாக முடிவுக்கு வந்து, ஈரான் முன்வைக்கும் நிபந்தனைகள் நிறைவேற்றப்படும் வரை ஆய்வுக்கு அனுமதி அளிக்கப்படாது. அமெரிக்காவின் ராஜதந்திர நடவடிக்கைகளை நம்ப முடியாத சூழல் நிலவுகிறது. எனவே, அனைத்து விதமான சவால்களையும் எதிர்கொள்ள ஈரான் தயாராக உள்ளது” என்றார்.

X