

இலங்கை அருகே ஈரானுக்கு சொந்தமான போர்க்கப்பலை அமெரிக்க நீர்மூழ்கி கப்பல் தாக்கி அழித்தது. இந்த சம்பவத்தில் 87 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இன்னும், பலரை காணவில்லை என்று சொல்லப்படுகிறது. ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடயே மோதல் உச்சத்தை தொட்டுள்ள நிலையில், ஈரான் கப்பலை தாக்கி அமெரிக்கா மூழ்கடித்து இருப்பது ஈரானுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. தங்கள் நாட்டு கப்பல் தாக்கப்பட்டதை ஒப்புக்கொண்டுள்ள ஈரான் சம்பவத்திற்கு கடும் கண்டனமும் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக ஈரான் வெளியுறவுத்துறை மந்திரி அப்பாஸ் அராக்சி தனது எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது: அமெரிக்கா தனது செயலுக்காக கடுமையாக வருந்தம் அடையும் நிலை வரும்.ஈரான் கரையோரத்திலிருந்து சுமார் 2,000 மைல் தொலைவில் கடலில் அமெரிக்கா ஒரு கொடூரச் செயலை நிகழ்த்தியுள்ளது. சுமார் 130 மாலுமிகளை கொண்டு சென்ற டெனா போர்க்கப்பல் சர்வதேச கடற்பகுதியில் எந்த முன்னறிவிப்பும் இன்றி தாக்கப்பட்டது. அமெரிக்கா ஏற்படுத்திய இந்த செயலுக்கு அவர்கள் கடுமையாக வருந்தும் நிலை வரும்,” என்று பதிவிட்டுள்ளார்.