பாகிஸ்தானுக்கு பயணம் மேற்கொள்ளும் ஈரான் வெளியுறவுத்துறை மந்திரி

ஈரான் மீது கடந்த அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து கூட்டு தாக்குதல் நடத்தின.
பாகிஸ்தானுக்கு பயணம் மேற்கொள்ளும் ஈரான் வெளியுறவுத்துறை மந்திரி
Published on

தெஹ்ரான்,

ஈரான் மீது கடந்த பிப்ரவரி 28ம் தேதி அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து கூட்டு தாக்குதல் நடத்தின. இதையடுத்து, இஸ்ரேல் மீதும் வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க படைத்தளங்கள் மீதும் ஈரான் தாக்குதல் நடத்தியது. மேலும், அரபிக்கடலில் ஹர்மூஸ் ஜலசந்தி பகுதியை ஈரான் மூடியது. இதனால் சர்வதேச சரக்கு, கச்சா எண்ணெய் போக்குவரத்தில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதேவேளை, ஈரானின் துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்தை அமெரிக்கா முடக்கியுள்ளது. இதனால் மத்திய கிழக்கில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.

இதனிடையே, பேச்சுவார்த்தைக்காக 2 வாரங்கள் போர் நிறுத்தம் அமல்படுத்தப்படுவதாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்தார். அதன்படி கடந்த 8ம் தேதி முதல் போர் நிறுத்தம் அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து, இந்த காலகட்டத்தில் ஈரானுடன் ஒப்பந்தம் மேற்கொள்ள அமெரிக்கா திட்டமிட்டது. அதன்படி பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் கடந்த 11, 12 ஆகிய தேதிகளில் அமெரிக்கா - ஈரான் பேச்சுவார்த்தை நடத்தியது. அந்த பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது.

அதேவேளை, 2 வார போர் நிறுத்த ஒப்பந்தம் கடந்த 22ம் தேதியுடன் நிறைவடைந்தது. ஆனால், ஈரான் - அமெரிக்கா போர் நிறுத்தம் தொடர்பாக பாகிஸ்தானில் நடைபெறவிருந்த 2ம் கட்ட பேச்சுவார்த்தை ரத்தானது. பேச்சுவார்த்தை ரத்தான போதும் போர் நிறுத்த ஒப்பந்தத்தை நீட்டிப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்துள்ளார். அதன்படி, மே 1ம் தேதி வரை போர் நிறுத்த ஒப்பந்தம் அமலில் இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்த கால கட்டத்திற்குள் ஒப்பந்தம் மேற்கொள்ளுமாறும் இல்லாவிட்டால் ஈரான் மீது மீண்டும் தாக்குதல் நடத்தப்படும் என்றும் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்நிலையில், ஈரான் வெளியுறவுத்துறை மந்திரி அப்பாஸ் அராச்சி இன்று பாகிஸ்தான் பயணம் மேற்கொள்ள உள்ளார். 2ம் கட்ட பேச்சுவார்த்தைக்காக பாகிஸ்தானுக்கு ஏற்கனவே அமெரிக்க குழு சென்றுள்ளது. இதனால், ஈரான் வெளியுறவுத்துறை மந்திரியின் பாகிஸ்தான் பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

அதேவேளை, பாகிஸ்தானில் அமெரிக்க பேச்சுவார்த்தைக்குழுவை ஈரான் வெளியுறவுத்துறை மந்திரி தலைமையிலான குழு சந்திக்காது என தகவல் வெளியாகியுள்ளது. பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் செல்லும் ஈரான் வெளியுறவுத்துறை மந்திரி தலைமையிலான குழு அங்கு பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப்பை சந்திக்க உள்ளதாகவும் அதன்பின் ஓமன், ரஷியா ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்காவுடனான மோதலுக்கு மத்தியில் ஈரான் வெளியுறவுத்துறை மந்திரியின் பாகிஸ்தான் பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com