

தெஹ்ரான்,
ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்கள் கடந்து செல்வதற்கு ஈரான் நேற்று அனுமதி வழங்கியிருந்த நிலையில், போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி ஈரான் துறைமுகம் மற்றும் கப்பல்களை அமெரிக்கா முற்றுகையிட்டு தாக்குதல் நடத்தியதாக கூறி, ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மீண்டும் மூடியது. இதன்படி ஹார்முஸ் ஜலசந்தியை கப்பல்கள் கடந்து செல்வதற்கு ஈரான் மீண்டும் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
இந்த நிலையில், ஈராக்கில் இருந்து எண்ணெய் பேரல்களை ஏற்றிக்கொண்டு வந்த 2 இந்திய சரக்கு கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சென்றுகொண்டிருந்தபோது ஈரான் ராணுவம் துப்பாக்கி சூடு நடத்தியதாகவும், இதனால் இந்திய கப்பல்கள் திரும்பி சென்றதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அந்த கப்பல்களில் 20 லட்சம் எண்ணெய் பேரல்கள் இருந்ததாக கூறப்படுகிறது.
முன்னதாக இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த சரக்கு கப்பல்கள் மீதும் ஈரானின் புரட்சிகர காவல்படை துப்பாக்கிச் சூடு நடத்தியதாக இங்கிலாந்து ராணுவம் தெரிவித்திருந்தது. இந்த தாக்குதலில் கப்பலுக்கும், பணியாளர்களுக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என இங்கிலாந்து ராணுவம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.