

டெல்அவிவ்,
ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் தொடுத்துள்ள போர், கடந்த 28-ந்தேதி தொடங்கி 5-வது வாரமாக நீடித்து வருகிறது. போரை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் பேச்சுவார்த்தை மூலமாகவும் மறுபுறம் இஸ்ரேலுடன் சேர்த்து ராணுவ தாக்குதலையும் அமெரிக்கா மேற்கொண்டு வருகிறது. ஆயுதங்களை விட்டொழித்து முழுவதுமாக சரணாகதி அடைவது, யுரேனியம் செறிவூட்டலை கைவிடுவது உள்ளிட்ட அமெரிக்காவின் நிபந்தனைகளை ஈரான் ஏற்றுக்கொள்ளாமல் தொடர்ந்து தாக்கு பிடித்து பதிலடி கொடுத்து வருகிறது
இதனால் அமெரிக்காவின் நட்பு நாடுகளான வளைகுடா நாடுகளுடன் இணைந்து இஸ்ரேலும் இந்த போருக்கான விலையை கொடுத்து வருகிறது. மறுபுறம் ஹார்முஸ் நீரிணை மூடப்பட்டதன் எதிரொலியாக உலக நாடுகளும் மறைமுகமாக பாதிக்கப்பட்டுள்ளன. இதன் உச்சமாக போர் தொடங்கியது முதல் கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய்க்கு 40 சதவீதம் வரை உயர்ந்தது.
இதனால் போரை முடிவுக்கு கொண்டு வர ஈரான், அமெரிக்கா, இஸ்ரேல் நாடுகளுக்கு அதன் நட்பு நாடுகள் அழுத்தம் கொடுத்து வருகிறது. இதற்கு மத்தியில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அந்த நாட்டு மக்களிடம் நேரடியாக பேசி முக்கியமான ஒரு தகவலை கூறப்போவதாக அறிவித்தார்.
20 நிமிடங்கள் நீடித்த இந்த உரையில் அவர், "அமெரிக்காவின் முக்கிய இலக்குகள் நிறைவேறும் நிலையில் உள்ளன என்று இன்று மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறேன். நாம் இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டோம். அடுத்த 2 முதல் 3 வாரங்களில் எதிரிகளை மிகவும் கடுமையாக தாக்கப்போகிறோம். அவர்களை "கற்கால யுகத்திற்கே” திருப்பி அனுப்புவோம்” என்று தெரிவித்திருந்தார்.
டிரம்பின் இந்த அறிவிப்பால் வரும் நாட்களில் ஈரான் மீதான தாக்குதல் இன்னும் தீவிரம் அடையும் என்று சொல்லப்பட்ட நிலையில், நேற்று ஈரானில் மிகப்பெரிய தாக்குதலை அமெரிக்கா நடத்தி உள்ளது. தெஹ்ரானில் இருந்து கராஜ் நகரை இணைக்கும் 136 மீட்டர் நீள பி1 பாலத்தின் ஒருபகுதி இதில் கடும் சேதம் அடைந்தது.
இந்நிலையில் இஸ்ரேலின் டெல் அவிவ் நகர் மீது ஈரான் ஏவுகணை தாக்குதலை நடத்தி உள்ளது. இன்று அதிகாலையில் டெல் அவிவ் பெருநகரப் பகுதி முழுவதும் ஒன்பது இடங்களில் ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டதில், ஒரு ரெயில் நிலையம் மற்றும் ஒரு கட்டிடம் கடுமையாக சேதமடைந்ததாக இஸ்ரேல் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. பி1 பாலத்தின் மீது அமெரிக்கா ஏவுகணை தாக்குதலை நடத்தியதற்கு, பதிலடி கொடுக்கும் விதமாகவே தற்போது இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேலையும், அமெரிக்க ராணுவ சொத்துக்களை கொண்டுள்ள ஜோர்டான், ஈராக் மற்றும் வளைகுடா நாடுகளை குறிவைத்து ஆளில்லா விமானம் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தி ஈரான் பதிலடி கொடுத்து வருகிறது. இதனால் உயிரிழப்புகளும், உள்கட்டமைப்பு சேதங்களும் ஏற்பட்டதோடு, உலகளாவிய சந்தைகளும், விமானப் போக்குவரத்தும் சீர்குலைந்துள்ளது குறிபிடத்தக்கது.