

வாஷிங்டன்,
இஸ்ரேலுடன் இணைந்து ஈரான் மீது அமெரிக்கா தாக்குதலை நடத்தியது. இதற்கு பதிலடியாக ஈரானும் தாக்குதலை தொடர்ந்ததுடன், உலக நாடுகளுக்கு கப்பல்கள் மூலம் கச்சா எண்ணெய் கொண்டு செல்லும் முக்கிய பாதையான ஹார்முஸ் நீரிணையை மூடியது. இதையடுத்து பல நாடுகளின் முயற்சியால் நடந்த சமரசத்தின் மூலம் ஈரான்-அமெரிக்கா இடையே போர் நிறுத்தம் அமலில் இருக்கிறது.
எனினும் ஈரானின் கடற்பகுதியை அமெரிக்கா முற்றுகையிட்டுள்ளதாலும், ஹார்முஸ் நீரிணையை ஈரான் மூடியிருப்பதாலும் வளைகுடாவில் முழுமையான அமைதி திரும்பவில்லை. இந்த முட்டுக்கட்டைகளுக்கு தீர்வு காணவும், ஈரான்-அமெரிக்கா இடையே அமைதி ஒப்பந்தம் ஏற்படுத்தவும் இரு தரப்பும் நடவடிக்கை எடுத்து வருகின்றன. பாகிஸ்தானும் இதில் தலையிட்டுள்ளது.
இந்த நிலையில், வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையின் ஓவல் அலுவலகத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
ஈரானின் ராணுவம் முற்றிலுமாக அழிக்கப்பட்டுவிட்டது. டிரோன், தொழிற்சாலைகள் 82 சதவீதம் செயலிழந்துள்ளன. ஈரான் ஒப்பந்தம் செய்ய ஆர்வமாய் இருக்கிறது. பேச்சுவார்த்தைகளின் தற்போதைய உண்மையான நிலவரம் ஒரு சிலருக்கு மட்டுமே தெரியும். ஈரானின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து வருகிறது.
கச்சா எண்ணெய் மூலம் ஈரானுக்கு வருமானம் வருவதில்லை. போராட்டம் நடத்தியதற்காக ஆயுதம் ஏந்தாத 42,000 அப்பாவி மக்களை ஈரான் அரசு கொன்றிருக்கிறது. ஆனால் அவர்கள் சொல்லும் எண்ணிக்கை அதைவிட மிக அதிகம். ஈரான் அணு ஆயுதத்தை உருவாக்க அனுமதிக்க முடியாது. ஈரானுடனான பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.