ஈரானின் கடல் கண்ணிவெடிகள் அகற்றப்பட்டு விட்டன; அமெரிக்கா தகவல்

அவற்றை பாதுகாக்கும் வகையில், வான் மற்றும் கடல் வழியே அமெரிக்க படைகள் செயல்பட்டன என்றார்.

ஈரானின் கடல் கண்ணிவெடிகள் அகற்றப்பட்டு விட்டன; அமெரிக்கா தகவல்
Published on: 

வாஷிங்டன்

ஈரானின் கடல் கண்ணிவெடிகள் அகற்றப்பட்டு விட்டன என அமெரிக்கா தெரிவித்து உள்ளது.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து, ஈரான் நாட்டை கடந்த பிப்ரவரி மாதம் இறுதியில், வான்வழியாக கடுமையாக தாக்கின. அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பான இந்த தாக்குதலை அடுத்து, ஈரானும் அதற்கு பதிலடி கொடுத்தது. இதனால், மேற்காசிய பகுதியில் பதற்றம் பரவியது. நீண்ட மோதலுக்கு பின்னர் போர்நிறுத்த உடன்படிக்கை ஏற்பட்டது. இதனால், பதற்றம் தணிந்தது.

எனினும், அவ்வப்போது அமெரிக்காவும், ஈரான் நாடும் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றன. மோதலின் ஒரு பகுதியாக ஈரான், ஹார்மூஸ் ஜலசந்தியை தன்னுடைய கட்டுப்பாட்டில் எடுத்து கொண்டுள்ளது. இதனால், உலக அளவில் சரக்கு கப்பல் போக்குவரத்து கடுமையாக பாதிப்படைந்து உள்ளது.

இந்நிலையில், அமெரிக்காவின் பாதுகாப்பு படையின் உயரதிகாரியான அட்மிரல் பிராட் கூப்பர் வெளியிட்டு உள்ள செய்தியில், ஹார்மூஸ் ஜலசந்தியில், ஈரானின் கடல் கண்ணிவெடிகள் அகற்றப்பட்டு விட்டன. கப்பல்கள் தடையின்றி அந்த வழியே செல்கின்றன என தெரிவித்து உள்ளார்.

நான் ஹார்மூஸ் ஜலசந்தியின் வான்வழியே விமானத்தில் சென்று பார்த்தபோது, சரக்குகள், கச்சா எண்ணெய், திரவ எரிவாயு உள்ளிட்டவற்றை ஏற்றி செல்லும் பல்வேறு வகையான வணிக கப்பல்கள் எண்ணற்ற அளவில் கடந்து சென்றன. அவற்றை பாதுகாக்கும் வகையில், வான் மற்றும் கடல் வழியே அமெரிக்க படைகள் செயல்பட்டன.

இவற்றில், நவீன கடல் டிரோன்கள் படையும் ரோந்து பணியில் ஈடுபட்டன. இவை எல்லாம் கப்பல்களின் பாதுகாப்பு பயணத்திற்காக செயல்பட்டு வருகின்றன என கூப்பர் குறிப்பிட்டு உள்ளார்.

இதேபோன்று பல தசாப்தங்களாக ஹார்மூஸ் ஜலசந்தியில், பயணம் செய்து வரும் வணிக கப்பல்களை அச்சுறுத்தியும், அவற்றை பறிமுதல் செய்தும் வந்த ஈரானின் இஸ்லாமிய காவல் படையினரையும் இந்த பகுதியில் காணவில்லை. அவர்களை நான் பார்க்கவில்லை. ஏனெனில், ஈரானின் கப்பல்கள் அனைத்தும் தகர்க்கப்பட்டு கிடக்கின்றன என அவர் தெரிவித்து உள்ளார்.

X