ஈரானில் ஹார்முஸ் நீரிணையை எண்ணெய் கப்பல்கள் கடக்க இனி சுங்கக் கட்டணம்..!

உலக நாடுகளுக்கு சரக்கு கப்பல் செல்ல கூடிய முக்கிய ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடி உள்ளது.
ஈரானில் ஹார்முஸ் நீரிணையை எண்ணெய் கப்பல்கள் கடக்க இனி சுங்கக் கட்டணம்..!
Published on

டெஹ்ரான்,

ஈரான் நாட்டை அமெரிக்காவும், இஸ்ரேலும் கூட்டாக இணைந்து வான்வழியாக கடந்த பிப்ரவரி 28-ந்தேதி கடுமையாக தாக்கின. தொடர்ந்து நடந்து வரும் தாக்குதலில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி, அவருடைய மனைவி, மகள், மருமகன் உள்ளிட்ட குடும்பத்தினரும், ஈரானின் பாதுகாப்பு மந்திரி அமீர் நசீர்ஜடே மற்றும் புரட்சிகர காவல்படை தளபதி முகமது பாக்பூர் உள்ளிட்ட பல முக்கிய அதிகாரிகள், தலைவர்கள், தளபதிகள் கொல்லப்பட்டனர். இதனை ஈரான் நாடும் உறுதி செய்தது. இதனால் மத்திய கிழக்கு பகுதியில் கடும் பதற்ற நிலை காணப்படுகிறது.

இதனை தொடர்ந்து ஈரான் நடத்தி வரும் பதிலடி தாக்குதல்களால் இஸ்ரேல், அமெரிக்கா மற்றும் அவற்றின் படை தளங்கள் அமைந்த வளைகுடா நாடுகள் பாதிக்கப்பட்டு உள்ளன. இதனால், பல்வேறு நாடுகளிலும் எரிபொருள் பற்றாக்குறை, விலைவாசி உயர்வு உள்ளிட்ட சிக்கல்கள் எழுந்துள்ளன. இதன் ஒரு பகுதியாக, உலக நாடுகளுக்கு சரக்கு கப்பல் செல்ல கூடிய முக்கிய ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியது. மீறி செல்லும் கப்பல்கள் தாக்கப்படும் சூழல் காணப்படுகிறது.

இந்த சூழலில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே நடந்து வரும் நேரடி மற்றும் மறைமுக பேச்சுவார்த்தைகளின் பலனாகவே ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது.

மத்திய கிழக்கு மோதல் தொடர்பான பதட்டங்கள் அதிகரித்து வரும் நிலையில், உலகின் மிக முக்கியமான எண்ணெய் போக்குவரத்துப் பாதையான ஹார்முஸ் நீரிணை மீது தனது கட்டுப்பாட்டை மேலும் கடுமையாக நிலைநாட்டும் விதமாக ஈரான் செயல்பட்டு வருகிறது. இதன் மூலம், அந்தப் பாதையின் திறமையான வாயில்காப்பாளராக தன்னை நிலைநிறுத்தி வருகிறது.

உலகளாவிய எண்ணெய் மற்றும் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு விநியோகத்தில் ஏறக்குறைய ஐந்தில் ஒரு பங்கு வழக்கமாக கடந்துசெல்லும் இந்த ஹார்முஸ் நீர்வழிப்பாதையை, ஈரான் ஒரு பொருளாதாரக் கருவியாகவும் புவிசார் அரசியல் அழுத்தப் புள்ளியாகவும் அதிகளவில் பயன்படுத்தி வருகிறது.

இந்நிலையில் ஈரானில் ஹார்முஸ் நீரிணையை எண்ணெய் கப்பல்கள் கடக்க இனி சுங்கக் கட்டணம் வசூலிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஈரான் அரசு சுங்கக் கட்டணம் வசூலிக்க அந்நாட்டு நாடாளுமன்ற பாதுகாப்பு ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளதாக கூறப்படுகிறது. தற்போது 2 ஆயிரம் கப்பல்கள் ஹார்முஸ் நீரிணை பகுதியில் சிக்கி உள்ளன.

பாதுகாப்பான பயணத்திற்காக ஏற்கனவே இரண்டு கப்பல்கள் பணம் செலுத்தியுள்ளதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

இந்தியாவின் 40 சதவீத கச்சா எண்ணெய், 90 சதவீத சமையல் எரிவாயு ஹார்முஸ் நீரிணை வழியாக கொண்டு வரப்படுவது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com