ஈராக்: ராணுவ தளங்கள் மீது மர்ம டிரோன்கள் தாக்குதலால் அதிர்ச்சி


ஈராக்:  ராணுவ தளங்கள் மீது மர்ம டிரோன்கள் தாக்குதலால் அதிர்ச்சி
x
தினத்தந்தி 24 Jun 2025 8:59 AM IST (Updated: 24 Jun 2025 9:04 AM IST)
t-max-icont-min-icon

ராணுவ நிலைகளை அடுத்துள்ள பாக்தாத் சர்வதேச விமான நிலையம் மீது ஆளில்லா விமானங்கள் தாக்குதல் நடத்தின.

பாக்தாத்,

ஈரானுக்கு எதிரான போரில் இஸ்ரேலுடன், அமெரிக்காவும் இணைந்து கொண்டது. இதில், ஈரானின் 3 முக்கிய அணு உலைகளை இலக்காக கொண்டு அமெரிக்கா தாக்கியது. எனினும், இதனால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முன்பே எடுத்து விட்டோம் என ஈரான் பதிலளித்தது.

ஆனால், அமெரிக்காவுக்கு பேரழிவு காத்திருக்கிறது என ஈரான் எச்சரித்தது. தொடர்ந்து பதில் தாக்குதலையும் தீவிரப்படுத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக அமெரிக்காவின் படைகள் நிறுத்தப்பட்ட நாடுகளை குறிவைத்து ஈரான் தாக்கி வருகிறது. இதில் கத்தார் நாடும் தாக்கப்பட்டது.

இந்நிலையில், ஈராக் ராணுவ தளங்கள் மீது மர்ம டிரோன்கள் தாக்குதல் நடத்தியுள்ளன என அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது. ஈராக் நாட்டின் தலைநகர் பாக்தாத்தில் இருந்து வடக்கே அல்-தஜி என்ற ராணுவ தளம் அமைந்துள்ளது. இதில் ராணுவ கண்காணிப்பு பணிக்கான ரேடார் அமைக்கப்பட்டு உள்ளது.

இது, பிரான்ஸ் நாட்டின் ரேடார் சாதனம் என கூறப்படுகிறது. எனினும், ஈராக் ராணுவம் அதனை செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில், இந்த ரேடார் மீது அடையாளம் தெரியாத டிரோன் ஒன்று (ஆளில்லா விமானம்) இன்று காலை தாக்கியுள்ளது. இதனை ஈராக் நாட்டின் அரசு ஊடகம் உறுதிப்படுத்தி உள்ளது.

எனினும், இதனால் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை என பாக்தாத் நகரத்திற்கான ராணுவ உயரதிகாரி கூறியுள்ளார். பாக்தாத்தில் தாக்குதல் நடந்த இந்த பகுதிகளுக்கு அருகேயுள்ள இடங்களிலும் தாக்குதல் முயற்சி நடந்துள்ளது. அதில் அமெரிக்க ராணுவ படையினர் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். அதிகாலையில் அல்-தஜி ராணுவ தளத்தில் சக்தி வாய்ந்த குண்டுவெடிப்பு ஒன்றும் நடத்தப்பட்டது. இதனால், அந்த தளத்தில் வான் வரை கரும்புகை எழுந்து அந்த பகுதி முழுவதும் சூழ்ந்திருந்தது.

இதேபோன்று, ராணுவ நிலைகளை அடுத்துள்ள பாக்தாத் சர்வதேச விமான நிலையம் மீது ஆளில்லா விமானங்கள் தாக்குதல் நடத்தின. எனினும், வான் பாதுகாப்பு சாதனங்கள் இந்த அச்சுறுத்தலை முறியடித்தன. அல்-அன்பார் மாகாணத்திற்கு உட்பட்ட அல்-பாக்தாதி மாவட்டத்தில் உள்ள எய்ன் அல்-ஆசாத் விமான தளத்தின் மீது மற்றொரு ஆளில்லா விமான தாக்குதல் நடத்தப்பட்டது.

இதிலும் அமெரிக்க படையினர் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். இந்த தாக்குதலுக்கு எந்தவொரு குழுவும் பொறுப்பேற்கவில்லை.

இதேபோன்ற தாக்குதல்கள், தெற்கு ஈராக்கின் இமாம் அலி விமான தளம் மற்றும் சலாதீன் மாகாணத்தில் உள்ள பலாத் விமான தளம் ஆகியவற்றின் மீதும் நடத்தப்பட்டு இருக்க கூடும் என உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

1 More update

Next Story