

ஜெருசலேம்,
‘நெசட்’ என்று அழைக்கப்படும் இஸ்ரேல் நாடாளுமன்றத்திற்கான பொதுத்தேர்தல் வாக்குப்பதிவு நேற்று விறுவிறுப்பாக நடைபெற்றது. கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி நடந்த ஹமாஸ் தாக்குதலுக்குப் பிறகு அந்நாட்டில் நடைபெறும் முதல் தேர்தல் இது என்பதால், இந்த தேர்தல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
இஸ்ரேல் நாடாளுமன்ற தேர்தலில் தற்போதைய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் முன்னாள் ராணுவ தளபதி காடி ஐசென்கோட் ஆகிய இருவருக்கும் இடையே கடும் போட்டி நிலவி வரும் சூழலில், பொதுமக்கள் அதிக அளவில் திரண்டு வந்து தங்களது வாக்குகளைப் பதிவு செய்தனர்.
அங்கு மொத்தம் உள்ள 73.3 லட்சம் வாக்காளர்களில், சுமார் 56.9 லட்சம் பேர்(77.7 சதவீதம்) பேர் தங்கள் வாக்குகளை செலுத்தியுள்ளனர். இஸ்ரேலில் இதற்கு முன்பு அதிகபட்சமாக 1999-ம் ஆண்டு 78.7 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருந்தது. இந்த முறை தேர்தலில், இஸ்ரேலில் உள்ள அரபு குடிமக்கள் அதிக அளவில் வாக்கு செலுத்தியுள்ளனர்.
இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் மொத்தம் உள்ள 120 இடங்களில், வெற்றி பெறுவதற்கு பெரும்பான்மையாக 61 இடங்கள் தேவை. இஸ்ரேல் நாட்டில் நாடாளுமன்ற தேர்தலைப் பொறுத்தவரை குடிமக்கள் நேரடியாக வேட்பாளர்களுக்கு வாக்கு செலுத்துவதில்லை. மாறாக அரசியல் கட்சிகளுக்கு வாக்கு செலுத்துகின்றனர். தேர்தலில் ஒரு கட்சிக்கு கிடைக்கும் வாக்கு சதவீதத்திற்கு ஏற்ப நாடாளுமன்றத்தில் எம்.பி. இடங்கள் கிடைக்கும்.
நாடாளுமன்றத்தில் இடம்பெற ஒரு கட்சி குறைந்தது 3.25 சதவீதம் வாக்குகளைப் பெற வேண்டும். வாக்கு சதவீதத்தின் அடிப்படையில் அரசியல் கட்சிகளுக்கு நாடாளுமன்றத்தில் எம்.பி. இடங்கள் ஒதுக்கப்படும். தேர்தலில் 3.25 சதவீதத்திற்கும் குறைவான வாக்குகளைப் பெற்ற கட்சிகளுக்கு நாடாளுமன்றத்தில் இடம் கிடைக்காது.
இஸ்ரேல் வரலாற்றில் இதுவரை எந்த ஒரு கட்சியும் தனியாக பெரும்பான்மைக்கு தேவையான 61 இடங்களை பெற்றதில்லை. இஸ்ரேல் நாடு உருவானதில் இருந்து இதுவரை அங்கு கூட்டணி ஆட்சியே அமைந்து வருகிறது.
இந்நிலையில் இன்று நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. தற்போதைய நிலவரப்படி பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் கட்சி 53 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. ஐசென்கோட் தலைமையிலான கட்சி 48 இடங்களில் மட்டுமே வென்றுள்ளது. இரண்டு கட்சிகளுமே 61 இடங்கள் என்ற பெரும்பான்மையை பெறவில்லை.
இதனிடையே தேர்தலில் போட்டியிட்ட அரபு கட்சிகள் 19 இடங்களில் வெற்றி பெற்றுள்ளன. இந்நிலையில், எதிர்கட்சிகள் கூட்டணி அமைத்தால் மொத்தம் 67 இடங்களுடன் ஆட்சியை கைப்பற்றும் நிலை ஏற்பட்டுள்ளது. இருப்பினும் ஐசென்கோட் தலைமையிலான யூத எதிர்க்கட்சி, பாலஸ்தீன ஆதரவு அரபு கட்சிகளுடன் கூட்டணி அமைக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆட்சியைப் பிடிப்பதற்கான முயற்சியில் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வரும் நிலையில், நெதன்யாகுவின் ஆட்சி தப்புமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.