

பெய்ஜிங்,
சீனாவில் ஒரே பெயரைக் கொண்ட மணமகனும், மணமகளும் காதலித்துத் திருமணம் செய்து கொண்ட விசித்திரமான சம்பவம் சமூக ஊடகங்களில் பெரும் வைரலாகி வருகிறது.
கிழக்கு சீனாவின் செஜியாங் மாகாணத்தில் உள்ள யிவு நகரத்தைச் சேர்ந்த 33 வயதான மணமகன் மற்றும் 28 வயதான மணமகள் இருவரின் பெயருமே 'ஜூ சியாசோங்' ஆகும். சீன மொழியிலும் இவர்களது பெயர் ஒரே மாதிரியான எழுத்துக்களிலேயே எழுதப்படுகிறது. அதுமட்டுமின்றி, இவர்கள் இருவரும் சிவில் விமானப் போக்குவரத்து துறையிலேயே (மனைவி விமானப் பணிப்பெண், கணவர் பாதுகாப்பு அதிகாரி) பணிபுரிகிறார்கள்.
கடந்த 2016-ம் ஆண்டு நடந்த ஒரு வேலைவாய்ப்பு முகாமில் நேர்காணல் செய்பவர் 'ஜூ சியாசோங்' என்று அழைத்தபோது, இவர்கள் இருவரும் ஒரே நேரத்தில் எழுந்து நின்றனர். அங்குதான் இவர்களது முதல் அறிமுகம் தொடங்கியது. பின்னர் கடந்த 2019-ம் ஆண்டு முதல் காதலிக்கத் தொடங்கிய இவர்கள், இந்த ஆண்டு (2026) மே மாதம் தங்களது திருமணத்தைப் பதிவு செய்து, கடந்த 6-ந்தேதி அன்று பெரும் விமரிசையாகத் திருமணம் செய்து கொண்டனர்.
இவர்களது திருமணப் பத்திரிகையைப் பார்த்த உறவினர்கள், அச்சிட்டவர் மணமகன் பெயரை மணமகளுக்கும் மாற்றி தப்பாக அச்சிட்டுவிட்டார் என்றே முதலில் நினைத்தனர். திருமணப் பதிவு மற்றும் சொத்து ஆவணங்களை கணினியில் பதிவு செய்யும்போது, இருவருக்கும் ஒரே பெயராக இருந்ததால் சிஸ்டத்தில் பல பிழைகள் ஏற்பட்டன. பின்னர் அதிகாரிகள் மேனுவலாகவே ஆவணங்களைச் சரிசெய்தனர். இணையவாசிகள் இந்த அரிய தற்செயல் நிகழ்வை "உண்மையான விதி" என்று சமூக வலைதளங்களில் கொண்டாடி வாழ்த்துகளைக் குவித்து வருகின்றனர்.