

வாஷிங்டன்,
ஆப்கானிஸ்தான் நாட்டில் ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு செயல்பட்டு வருகிறது. இதன் ஒரு பிரிவான ஐ.எஸ்.ஐ.எஸ். கோரசன் தெற்கு ஆசியாவில் செயல்பட்டு வருகிறது.
அமெரிக்காவின் தேசிய பயங்கரவாத ஒழிப்பு மைய பொறுப்பு இயக்குனராக ரஸ்செல் டிராவர்ஸ் இருந்து வருகிறார். இந்நிலையில், இந்திய வம்சாவளியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் மேகீ ஹசன் எழுப்பிய கேள்வி ஒன்றிற்கு பதிலளித்த டிராவர்ஸ், ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பின் அனைத்து பிரிவுகள் மற்றும் நெட்வொர்க்குகளில் ஐ.எஸ்.ஐ.எஸ். கோரசன் பிரிவு அதிகம் கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய அமைப்பு. இதில், 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தனிநபர்கள் செயல்பட்டு வருகின்றனர்.
ஆப்கானிஸ்தானுக்கு வெளியே தாக்குதல் முயற்சியில் அவர்கள் ஈடுபட்டு உள்ளனர். கடந்த வருடம் இந்தியாவில் தற்கொலை தாக்குதல் ஒன்றை நடத்த முயற்சி செய்தனர். ஆனால் அது தோல்வியில் முடிந்தது என கூறினார்.
ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானுக்கு ஹசன் கடந்த மாதம் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இதில், ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்க படைகளுக்கு அச்சுறுத்தலாக இருந்ததுடன் இந்த கோரசன் பிரிவு அமெரிக்க நாட்டின் மீது தாக்குதல் நடத்தவும் திட்டமிட்டு இருந்தது என எனக்கு தெளிவான தகவல் கிடைத்தது என்று கூறியுள்ளார்.