இஸ்ரேல் விமான நிலையத்தை குறிவைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணை தாக்குதல்

ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இஸ்ரேல் விமான நிலையத்தை குறிவைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணை தாக்குதல்
Published on

ஜெருசலேம்,

இஸ்ரேல் , ஹமாஸ் இடையேயான போர் ஓராண்டுக்குமேல் நடைபெற்று வருகிறது. இந்த போரில் 52 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதனிடையே, இஸ்ரேல், ஹமாஸ் இடையேயான போரில் ஹமாஸ் ஆயுதக்குழுவினருக்கு ஏமனில் செயல்பட்டு வரும் ஹவுதி கிளர்ச்சியாளர் ஆதரவு அளித்து வருகின்றனர்.

ஹமாசுக்கு ஆதரவு அளிக்கும் வகையிலும், இஸ்ரேலுக்கு எதிரான நடவடிக்கை என்ற பெயரில் அரபிக்கடல், செங்கடலில் செல்லும் சரக்கு கப்பல்களை குறிவைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். மேலும், இஸ்ரேல் மீதும் அவ்வப்போது ஏவுகணை, டிரோன் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இஸ்ரேல் விமான நிலையத்தை குறிவைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் இன்று ஏவுகணை தாக்குதல் நடத்தினர். இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் உள்ள சர்வதேச விமான நிலையமான பென் குரின் விமான நிலையத்தை குறிவைத்து ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டது.

இஸ்ரேலின் வான் பாதுகாப்பு அமைப்பையும் மீறி ஏவுகணை விமான நிலையத்திற்குள் உள்ளே ஓடுதளம் அருகே இருந்த சாலையில் விழுந்துள்ளது. இந்த சம்பவத்தில் 7 பேர் காயமடைந்தனர்.

இந்த ஏவுகணை தாக்குதலை தொடர்ந்து விமான நிலையத்தில் விமான சேவை சில நிமிடங்கள் ரத்து செய்யப்பட்டன. தற்போது விமான சேவை இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது.

அதேவேளை, ஹவுதி நடத்திய ஏவுகணை தாக்குதலுக்கு 7 மடங்கு பதிலடி கொடுக்கப்படும் என்று இஸ்ரேல் பாதுகாப்புத்துறை மந்திரி தெரிவித்துள்ளார். இந்த தாக்குதல் தொடர்பாகவும், பதிலடி கொடுப்பது குறித்தும் பிரதமர் நெதன்யாகு பாதுகாப்பு மந்திரி சபையை கூட்டி ஆலோசனை நடத்த உள்ளார். இதன் மூலம் ஏமனில் செயல்பட்டு வரும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது இஸ்ரேல் இன்னும் ஓரிரு நாட்களில் தாக்குதல் நடத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com