

பெரூட்,
ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி 28ம் தேதி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேல், அரபு நாடுகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. இந்த மோதலால் மத்திய கிழக்கில் பதற்றமான சூழ்நிலை நிலவியது. இந்த மோதலில் ஈரானுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் லெபனானில் செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லா ஆயுதக்குழுவினர் இஸ்ரேல் மீது தாக்குதலை தொடங்கினர்.
இதனால், இஸ்ரேல் - ஹிஸ்புல்லா ஆயுதக்குழுவினர் இடையே மோதல் ஏற்பட்டது. லெபனானில் செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லா ஆயுதக்குழுவினர், ஹிஸ்புல்லாவின் ஆயுதக்கிடங்குகள், கட்டுப்பாட்டு மையங்களை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. ஹிஸ்புல்லா ஆயுதக்குழுவினரும் இஸ்ரேல் மீது அவ்வப்போது டிரோன்கள், ஏவுகணைகளை ஏவி தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
அதேவேளை, லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்துவதை நிறுத்த வேண்டுமென அந்நாட்டு அதிபர் ஜோசப் அரோன் வேண்டுகோள் விடுத்தார். மேலும், அமெரிக்காவில் இஸ்ரேல் - லெபனான் இடையே நடந்த பேச்சுவார்த்தையில் இரு தரப்பு சண்டை நிறுத்தத்தை அமல்படுத்த ஒப்புக்கொண்டன. இதையடுத்து, கடந்த சில நாட்கள் லெபனான் மீதான தாக்குதலை இஸ்ரேல் நிறுத்தியது. அதேவேளை, தங்கள் நாட்டின் மீது ஹிஸ்புல்லா பயங்கரவாத அமைப்பினர் தாக்குதல் நடத்துவதை லெபனான் அரசு தடுக்க வேண்டும் என்று இஸ்ரேல் தெரிவித்தது. இந்த பதற்றமான சூழ்நிலையில் அமெரிக்கா, இஸ்ரேலுடனான மோதலில் தங்கள் நாட்டை ஈரான் பகடைக்காயாக லெபனான் அதிபர் ஜோசப் அரோன் குற்றஞ்சாட்டினார்.
இந்த சூழ்நிலையில் லெபனானில் செயல்பட்டு வரும் ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா பயங்கரவாத அமைப்பு இன்று காலை இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இஸ்ரேலின் யப்தப், ரபொட் நப்தலி ஆகிய நகரங்களை குறிவைத்து ஏவுகணைகள் ஏவப்பட்டன. இந்த ஏவுகணைகளை இஸ்ரேல் வான்பாதுகாப்பு அமைப்பு நடுவானில் சுட்டு வீழ்த்தியது.
இந்நிலையில், ஹில்புல்லா பயங்கரவாத அமைப்பின் ஏவுகணை தாக்குதலுக்கு பதிலடியாக லெபனான் மீது இன்று இஸ்ரேல் அதிரடி தாக்குதல் நடத்தியுள்ளது. லெபனானின் டஹியா மாவட்டத்தில் செயல்பட்டு வந்த ஹிஸ்புல்லா அமைப்பினரின் கட்டுப்பாட்டு மையங்கள், உள்கட்டமைப்புகளை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. டஹியா மாவட்டத்தில் உள்ள 2 அடுக்குமாடி கட்டிடங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் 2 பேர் உயிரிழந்தனர். மேலும், 11 பேர் படுகாயமடைந்தனர்.
லெபனான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்கு ஈரான் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும், இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கப்படும் என்றும் ஈரான் தெரிவித்துள்ளது. இதனால், இஸ்ரேல் - ஈரான் இடையே மீண்டும் நேரடி மோதல் ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இதையடுத்து, மத்திய கிழக்கில் உச்சபட்ச பதற்றம் நிலவி வருகிறது.