

ஈரான் மீது இஸ்ரேல் மீண்டும் தாக்குதல் நடத்தியதால் மத்திய கிழக்கில் போர் பதற்றம் மீண்டும் உச்சத்தை எட்டியுள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், "ஈரானுக்கு பதிலடி கொடுக்க வேண்டாம்" என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிடம் நேரடியாக வலியுறுத்தியிருந்த நிலையிலும், இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்டுள்ளது.
லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பின் கட்டமைப்புகளை இஸ்ரேல் தாக்கியதால் கோபம் அடைந்த ஈரான், அந்த நாட்டின் மீது ஏவுகணை வீசி தாக்குதல் நடத்தியது. 10 க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை வீசி ஈரான் தாக்கிய நிலையில், அவற்றை இடைமறித்து அழித்ததாக இஸ்ரேலும் கூறியிருந்தது. தற்காலிக போர் நிறுத்தம் ஏற்பட்ட பிறகு முதல் முறையாக இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதால் மத்திய கிழக்கில் பெரும் பதற்றம் ஏற்பட்டது. இதையடுத்து, அமெரிக்க அதிபர் டிரம்ப் உடனடியாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை தொடர்பு கொண்டு தொலைபேசியில் பேசினார். ஈரான் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க வேண்டாம் என்று பெஞ்சமின் நெதன்யாகுவிடம் கூறினார். ஆனால், இந்த டிரம்பின் எச்சரிக்கையையும் மீறி ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது.
ஈரான் தலைநகர் தெஹ்ரான் உள்ளிட்ட நகரங்களை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது. இஸ்ரேல் தாக்குதலால், ஈரானில் பல நகரங்களில் வெடிச்சதம் கேட்கிறது. தலைநகர் தெஹ்ரானில் உள்ள மெஹ்ராபாத் சர்வதேச விமான நிலையம் அருகே உள்பட பல இடங்களில் தொடர் வெடிச்சத்தங்கள் கேட்டன. மேலும், இஸ்பஹான் மற்றும் தப்ரீஸ் நகரங்களிலும் தாக்குதல் நிகழ்ந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஈரான் - இஸ்ரேல் மோதலால் மத்திய கிழக்கில் உச்ச கட்ட பதற்றம் ஏற்பட்டுள்ள சூழலில், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு 2 டாலருக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. இந்த தாக்குதலால், அமெரிக்கா - ஈரான் இடையே நடைபெற்று வரும் அமைதிப் பேச்சுவார்த்தைகளும் திட்டமிட்டபடி சுமூக முடிவை எட்டுமா? என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.