இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே போர்நிறுத்த ஒப்பந்தம் நீட்டிப்பு; அமெரிக்க அதிபர் வரவேற்பு

அமெரிக்காவை விட கூடுதலான நிதியுதவியை வேறு எந்த நாடும் பாலஸ்தீனியர்களுக்கு வழங்கவில்லை என்று அமெரிக்க அதிபர் பைடன் கூறினார்.
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே போர்நிறுத்த ஒப்பந்தம் நீட்டிப்பு; அமெரிக்க அதிபர் வரவேற்பு
Published on

வாஷிங்டன் டி.சி.,

இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு, அக்டோபர் 7-ந்தேதி ஆயிரக்கணக்கான ராக்கெட்டுகளை வீசி தாக்குதல் நடத்தியதுடன் எல்லை பகுதியையும் சூறையாடி, வன்முறையில் ஈடுபட்டது. இதற்கு இஸ்ரேலும் பதிலடி கொடுத்தது.

இரு தரப்பினருக்கும் இடையே ஒரு மாதத்திற்கும் மேலாக நீடித்து வந்த இந்த போரில், 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் உயிரிழந்தனர். 2,700 பேர் காணாமல் போயுள்ளனர். இஸ்ரேலில் 1,200 பேர் உயிரிழந்து இருக்கின்றனர்.

இந்த சூழலில், இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு போர்நிறுத்த ஒப்பந்தத்திற்கு சம்மதம் தெரிவித்தன. இதன்படி, கடத்தப்பட்ட 240 பேரில் பெண்கள் மற்றும் குழந்தைகள் என 50 பேர் 4 நாட்களில் அடுத்தடுத்து விடுவிக்கப்படுவார்கள். இதனால், இருதரப்பு மோதலும் 4 நாட்களுக்கு நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது.

எகிப்து, அமெரிக்கா மற்றும் கத்தார் ஆகிய நாடுகள் மேற்கொண்ட மத்தியஸ்த முயற்சியின் பலனாக, முதலில் 13 பேரும், பின்னர் 17 பேரும் என ஹமாஸ் அமைப்பு பிடித்து வைத்திருந்த பணய கைதிகள் அடுத்தடுத்து விடுவிக்கப்பட்டனர். 4-வது நாளில் 11 பேரை ஹமாஸ் அமைப்பு விடுவித்தது.

இந்த போர்நிறுத்த ஒப்பந்தம் நேற்றுடன் முடிவுக்கு வந்த நிலையில், கத்தார் நாட்டின் மத்தியஸ்த பேச்சுவார்த்தையின் பலனாக, கூடுதலாக 2 நாட்களுக்கு போர்நிறுத்த ஒப்பந்தம் நீட்டிக்கப்பட்டது. இந்த முடிவை, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வரவேற்றுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள செய்தியில், அமெரிக்கா நடுவராக மற்றும் தூதர் என்ற அளவில் செயல்பட்டு அதன் வழியே நடந்த இந்த போர்நிறுத்த ஒப்பந்தம் ஆனது, நல்ல முடிவுகள் கிடைப்பதற்காக தொடர முடியும் என உறுதி செய்யப்படுவதற்காக, நான் தொடர்ந்து சில நாட்களாக அதற்கான பணியில் ஈடுபட்டேன் என தெரிவித்து உள்ளார்.

தொடர்ந்து அவர் ஹமாஸ் அமைப்பினர் பணய கைதிகளை விடுவித்தது பற்றி கூறும்போது, இதுவரை 50-க்கும் மேற்பட்ட பணய கைதிகள் விடுவிக்கப்பட்டு, அவர்களுடைய குடும்பத்தினருடன் இணைந்துள்ளனர்.

இவர்களில் குழந்தைகள், தாயார்கள் மற்றும் வயது முதிர்ந்தோர்களும் அடங்குவார்கள் என தெரிவித்து உள்ளார்.  அமெரிக்காவை விட கூடுதலான நிதியுதவியை வேறு எந்த நாடும் பாலஸ்தீனியர்களுக்கு வழங்கவில்லை என்று அவர் அழுத்தி கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com