இஸ்ரேல், ஈரான், அமெரிக்காவுக்கு அனுமதி மறுத்த ஜோர்டான்... எதற்காக?

லெபனான் நாட்டின் பெய்ரூட் நகரில் ஹிஜ்புல்லா இயக்க தலைவரையும், ஈரான் நாட்டின் தெஹ்ரானில் ஹமாஸ் தலைவரையும் இஸ்ரேல் தாக்கி படுகொலை செய்தது.
இஸ்ரேல், ஈரான், அமெரிக்காவுக்கு அனுமதி மறுத்த ஜோர்டான்... எதற்காக?
Published on

அம்மன்,

இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பு கடந்த ஆண்டு அக்டோபரில் கொடூர தாக்குதல் நடத்தியதில், இஸ்ரேல் மக்களில் 1,200-க்கும் மேற்பட்டோர் படுகொலை செய்யப்பட்டனர். பணய கைதிகளாக சிலர் சிறை பிடித்து செல்லப்பட்டனர். இதற்கு பதிலடியாக, காசாவை இலக்காக கொண்டு இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் 39 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் பலியாகி உள்ளனர்.

பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவாக, ஹிஜ்புல்லா பயங்கரவாத அமைப்பும் போரில் ஈடுபட்டு வருகிறது. இஸ்ரேலை தாக்கி வருகிறது. இந்நிலையில், இஸ்ரேலின் கட்டுப்பாட்டுக்குள் உள்ள கோலன் ஹைட்ஸ் பகுதியில் கால்பந்து திடல் ஒன்றில் திடீரென சில நாட்களுக்கு முன் ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டதில், குழந்தைகள் உள்பட 12 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர்.

இதன் தொடர்ச்சியாக, இஸ்ரேல் பதிலடி தாக்குதலில் ஈடுபட்டது. இதில், அடுத்தடுத்து பலர் கொலை செய்யப்பட்டனர். ஹமாஸ் அமைப்பின் தலைவரான இஸ்மாயில் ஹனியே கொல்லப்பட்டார். அடுத்து, ஹிஜ்புல்லா அமைப்பின் தளபதி புவாத் ஷுகர் என்பவரை இஸ்ரேல் தாக்கி படுகொலை செய்தது. இதனை தொடர்ந்து அந்த பகுதியில் பதற்றம் தொற்றி கொண்டது.

இதன் தொடர்ச்சியாக, ஈரான் தலைவர் அயோதுல்லா அலி காமினி, இஸ்ரேல் மீது நேரடி தாக்குதலை நடத்தும்படி தன்னுடைய படைகளுக்கு உத்தரவிட்டு உள்ளார். இதனால், ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே நேரடி மோதல் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரித்து காணப்படுகின்றன. இதனால், அவற்றின் அண்டை நாடுகளுக்கு சிக்கல் ஏற்பட்டு உள்ளது.

இந்த நிலையில், ஜோர்டான் அரசு வெளியிட்டு உள்ள செய்தியில், மத்திய கிழக்கு பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ள சூழலில் இஸ்ரேல், ஈரான் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் ஜோர்டான் வான்வெளியை பயன்படுத்த அரசு அனுமதிக்காது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இஸ்ரேலில் இருந்து வெளிவரும் ஒய்நெட் என்ற வலைதளத்தில், ஈரான் மீது தாக்குதல் நடத்துவதற்கான வாய்ப்புகள் பற்றி இஸ்ரேல் பரிசீலனை செய்து வருகிறது. ஆனால், இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவிடம் அதற்கு தேவையான உளவு தகவல்கள் இருக்க வேண்டும். அதன் அடிப்படையிலேயே தாக்குதல் இருக்கும் என தெரிவித்து உள்ளது.

இதற்கு முன் லெபனான் நாட்டின் பெய்ரூட் நகரில் வைத்து, ஹிஜ்புல்லா இயக்க தலைவரையும், ஈரான் நாட்டின் தெஹ்ரானில் வைத்து ஹமாஸ் அமைப்பின் தலைவரையும் இஸ்ரேல் தாக்கி படுகொலை செய்தது. இதனால், ஈரான் கடுமையான ஆத்திரத்தில் உள்ளது. இஸ்ரேல் மீது ஈரான் மற்றும் ஹிஜ்புல்லா பதிலடி தாக்குதல் நடத்த கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com