ஈரான் விவகாரம்: அமெரிக்காவுக்கு ஆதரவாக பிரிட்டன் கருத்து

Photo Credit: AP
இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா களமிறங்கிய நிலையில், ஈரானுக்கு ஆதரவாக ரஷியா உள்ளிட்ட நாடுகள் களமிறங்கும் சூழலும் ஏற்படலாம்.
லண்டன்,
பயங்கரவாதத்தை ஈரான் ஆதரிப்பதாகக் கூறி, ஈரானின் 3 அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலால், உலக நாடுகளிடையே போர்ப் பதற்றம் நிலவி வருகிறது. அமெரிக்காவின் தாக்குதலுக்கு பதிலடியாக, மீண்டும் இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. இதன் காரணமாக மத்திய கிழக்கில் உச்சகட்ட பதற்றம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், மத்திய கிழக்கில் நிலவி வரும் நெருக்கடியான சூழலுக்கு முற்றுப்புள்ளி வைக்குமாறு ஈரானுக்கு பிரிட்டன் அழைப்பு விடுத்துள்ளது. இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா களமிறங்கிய நிலையில், ஈரானுக்கு ஆதரவாக ரஷியா உள்ளிட்ட நாடுகள் களமிறங்கும் சூழலும் ஏற்படலாம். இந்த நிலையில், ஈரானின் அணுசக்தி ஆயுதத்துக்கு பிரிட்டன் பிரதமரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ஈரானை பேச்சுவார்த்தைக்கு அழைத்த பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர், ``ஈரானின் அணுசக்தி திட்டமானது, சர்வதேச பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது.
ஈரான் அணு ஆயுதத்தை உருவாக்குவதை, ஒருபோதும் அனுமதிக்க முடியாது. அந்த அச்சுறுத்தலைத் தணிக்கவே அமெரிக்காவும் தாக்குதல் நடவடிக்கையும் மேற்கொண்டுள்ளது. மத்திய கிழக்குப் பகுதியில் அமைதியின்மையும் போர்ப் பதற்றமும் நிலவி வருகிறது. ஆகையால், ஈரான் பேச்சுவார்த்தைக்கு உட்பட்டு, இந்த நெருக்கடியான சூழ்நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்க, ஒரு ராஜதந்திர தீர்வையும் மேற்கொள்ள வேண்டும்'' என்று தெரிவித்துள்ளார்.






