பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் பதில் தாக்குதல்- மேற்குகரையில் போர் பதற்றம்

காசாவில் ஹமாஸ் குழுவினர் பதுங்கி இருந்த இடங்களில் இஸ்ரேல் பாதுகாப்புப்படை பதில் தாக்குதல் நடத்தி வருகிறது.
Image Courtesy : AFP
Image Courtesy : AFP
Published on

ஜெருசலேம்,

இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்திற்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் நிலவி வருகிறது. பாலஸ்தீனத்தின் காசா முனையை ஹமாஸ் அமைப்பும், மேற்குகரை பகுதியை முகமது அப்பாஸ் தலைமையிலான அரசும் நிர்வகித்து வருகின்றன.

அதேவேளை, ஹமாஸ் அமைப்பை இஸ்ரேல் பயங்கரவாத இயக்கமாக கருதுகிறது. ஹமாஸ் அமைப்பை போன்றே பாலஸ்தீனியன் இஸ்லாமிக் ஜிகாத் உள்பட மேலும் சில ஆயுதக்குழுக்களும் காசா முனை, மேற்குகரையில் செயல்பட்டு வருகின்றன.

மேற்குகரையின் சில பகுதிகள் இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் உள்ளன. இந்த பகுதிகளில் இஸ்ரேலிய பாதுகாப்பு படையினருக்கும், பாலஸ்தீனிய ஆயுதக்குழுக்களுக்கும் இடையே அவ்வப்போது மோதல் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.

இந்நிலையில், இஸ்ரேல் மீது காசா முனையில் செயல்பட்டு வரும் ஹமாஸ், பாலஸ்தீனியன் இஸ்லாமிக் ஜிகாத் உள்ளிட்ட ஆயுதக்குழுக்கள், 'ஆபரேஷன் அல் அக்சா ஃபிளட்' என்ற பெயரில் இன்று திடீர் தாக்குதல் நடத்தின. காசா முனையில் இருந்து 20 நிமிடங்களில் 5 ஆயிரம் ராக்கெட்டுகள் இஸ்ரேல் மீது ஏவப்பட்டுள்ளன. மேலும், இஸ்ரேலின் பல்வேறு நகரங்களுக்குள் நுழைந்த பாலஸ்தீனிய ஆயுதக்குழுவினர் துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

பாலஸ்தீனிய ஆயுதக்குழுக்களின் திடீர் தாக்குதலால் இஸ்ரேலில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேல் பாதுகாப்புப்படையினர் அதிரடியாக களமிறக்கப்பட்டுள்ளனர். ரிசர்வ் படைகளும் களத்தில் இறக்கப்பட்டுள்ளன. மேலும், போர் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும், போருக்கு தயார் என்றும் இஸ்ரேல் அதிரடியாக அறிவித்துள்ளது.

இதையடுத்து 'ஆபரேஷன் அயர்ன் ஸ்வார்ட்' என்ற பெயரில் காசாவில் ஹமாஸ் குழுவினர் பதுங்கி இருந்த இடங்களில் இஸ்ரேல் பாதுகாப்புப்படை பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. இஸ்ரேலுக்குள் நுழைய முயன்ற ஹமாஸ் குழுவினர் மீது இஸ்ரேல் ராணுவம் துப்பாக்கிச்சூடு நடத்தி வருகிறது. இதன் காரணமாக மேற்குகரையில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com