

துபாய்,
இஸ்ரேல் சென்ற விமானத்தை கடத்த முயற்சி ‘பயங்கரவாத செயல்’ என்பதும், துணை விமானி குறித்து பல்வேறு அதிர்ச்சி தகவல்களும் வெளியாகியுள்ளன.
ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாயில் இருந்து கடந்த 30-ந்தேதி இஸ்ரேலுக்கு சென்ற, பிளைதுபாய் நிறுவனத்தின் பயணிகள் விமானத்தை இயக்கிய அதன் துணை விமானி கடத்த முயன்றார்.
விமானத்தை இயக்கிய இந்திய விமானி சுமித் மச்சாரை, விமானி அறையில் உள்ள விபத்துக்கால கோடாரியால் துணை விமானி தாக்கினார். ஆனால் சுமித் மச்சார் கடுமையாக போராடி, விமான கடத்தலை தடுத்தார். பின்னர் துணை விமானியை பயணிகள் மடக்கி பிடித்தனர்.
இதையடுத்து விமானத்தில் இருந்த மாற்று விமானிகள் மூலம் விமானம் சவுதி அரேபியாவில் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது. துணை விமானியை சவுதி அரேபியா அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தினர். இச்சம்பவத்தில் பயங்கரவாத பின்புலம் இருப்பதாக தகவல் வெளியானது.
இதற்கிடையே துணை விமானியை நேற்று ஐக்கிய அரபு அமீரகத்திடம் சவுதி அரேபியா ஒப்படைத்தது.
அவரிடம் ஐக்கிய அரபு அமீரகத்தின் சிறப்பு புலனாய்வு குழுவினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் திட்டமிட்ட பயங்கரவாத செயல் என்று ஐக்கிய அரபு அமீரகம் அறிவித்து உள்ளது.
விமானத்தை கடத்த முயன்ற துணை விமானி, ஓமன் நாட்டை சேர்ந்தவர் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் இச்சம்பவம் நடந்த 3 நாட்களுக்கு பிறகு துணை விமானியின் பெயர் உள்ளிட்ட விவரங்கள் வெளியாகி இருக்கிறது.
அவர் 29 வயதான ஹமாம் அல் ஹமாமி என்பது தெரிய வந்து உள்ளது. ஓமன் நாட்டு குடிமகனான அவர், ஐக்கிய அரபு எமிரேட்சில் ஒரு ஓமன் தந்தைக்கும் சிரிய தாய்க்கும் பிறந்தவர் ஆவார். அவர் இங்கிலாந்தில் உள்ள பக் கிங்ஹாம்ஷயர் நியூ பல்கலைக்கழகத்தில் விமான போக்குவரத்து மேலாண்மை பயின்றதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஓமனின் தேசிய விமான நிறுவனமான ஓமன் ஏர் நிறுவனத்தில் இணை விமானி பயிற்சியாளராக பணியில் சேர்ந்தார். கடந்த 2024-ம் ஆண்டு அவரிடம் பயங்கரவாத சிந்தனையை தூண்டும் பொருட்கள் இருப்பது கண்டறியப்பட்டது.
இதையடுத்து அவர் தொடர்ந்து பணியாற்ற அனுமதி மறுக்கப்பட்டது. மேலும் விமானத்தை இயக்கவும் ஓமன் தடை விதித்தது. அதன்பின் அவர் மொராக்கோவின் தேசிய விமான நிறுவனமான ராயல் ஏர் மரோக்கில் பணியாற்றி உள்ளார்.
கடந்த 8 மாதங்களுக்கு முன்புதான் துபாயை தலைமையிடமாக கொண்ட பிளைதுபாய் நிறுவனம் பணியில் சேர்ந்து உள்ளார். அவருக்கு ஓமன் அரசு தடை விதித்திருந்த போதி லும் பிளைதுபாய் நிறுவனம் பணியில் சேர்ந்து உள்ளது. தடை விதிக்கப்பட்ட ஒருவர் பிளை துபாய் விமான நிறு வனத்தில் பணியில் சேரு வதற்கு அனுமதிக்கப்பட்டார் என்பது குறித்து சிறப்பு புலனாய்வு குழு தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகிறது.
மேலும் ஹமாம் அல் ஹமாமி பற்றி மற்றொரு தகவல் வெளியாகி இருக்கிறது. அவர் தனது வாழ்க்கையின் பெரும்பகுதியை ஓமனுக்கு வெளியேதான் கழித்து உள்ளார். குறிப்பாக சிரியாவில் நீண்ட காலமாக இருந்து உள்ளார். அங்கு அவர் பயங்கரவாத கருத்துகளால் ஈர்க்கப்பட்டதாக கூறப்படுகிறது. பின்னர் அவர் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு சென்று உள்ளார்.
அவரது சமூக ஊடக பக்கங்களில் அல் கொய்தாவுடன் தொடர்புடைய 2 பேரின் படங்கள் இடம் பெற்றுள்ளது. ஒசாமா பின்லேடன் மரணத்திற்குப் பிறகு அல் கொய்தா அமைப்பை வழிநடத்திய ஐமன் அல் ஜவாஹிரி மற்றும் 2009-ம் ஆண்டு 7 அமெரிக்க அதிகாரிகள் உள்பட 9 பேர் கொல்லப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலை நடத்திய ஹுமாம் கலீல் அபு முலால் அல் பலாவியின் புகைப்படங்கள் இடம் பெற்றிருந்தன. மேலும் அவர் விமானத்தை கடத்தி இஸ்ரேலில் மோதச் செய்ய திட்டமிட்டிருந்தார் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.