இஸ்ரேல் பயணம் நிறைவு; இந்தியா புறப்பட்டார் பிரதமர் மோடி - 27 ஒப்பந்தங்கள் கையெழுத்து

உலகத்தில் பயங்கரவாதத்திற்கு எங்கும் இடமில்லை என்பதில் இந்தியாவும், இஸ்ரேலும் உறுதியாக உள்ளன என மோடி தெரிவித்தார்.
இஸ்ரேல் பயணம் நிறைவு; இந்தியா புறப்பட்டார் பிரதமர் மோடி - 27 ஒப்பந்தங்கள் கையெழுத்து
Published on

ஜெருசலேம்,

பிரதமர் மோடி இஸ்ரேல் நாட்டுக்கு 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இதற்காக நேற்று காலை அவர் டெல்லியில் இருந்து தனி விமானத்தில் புறப்பட்டு சென்றார். இஸ்ரேலின் பென் குரின் சர்வதேச விமான நிலையம் சென்றடைந்த பிரதமர் மோடியை அந்நாட்டின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நேரில் சென்று வரவேற்றார்.

அதன்பின்னர் நேற்று மாலை அந்த நாட்டு நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி உரையாற்றினார். இந்த உரைக்குப்பின் பிரதமர் மோடிக்கு 'நெசெட் சபாநாயகர்' பதக்கம் வழங்கப்பட்டது. அந்நாட்டு நாடாளுமன்ற சபாநாயகர் அமினர் ஒகானா இதனை வழங்கினார்.

இதன் மூலம் இஸ்ரேல் நாடாளுமன்றத்தின் இந்த உயரிய பதக்கம் பெறும் முதலாவது இந்திய பிரதமர் மோடி மற்றும் இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய முதல் இந்திய பிரதமர் ஆகிய பெருமைகளை பிரதமர் மோடி பெற்றுள்ளார். தொடர்ந்து, ஜெருசலேமில் உள்ள யாத் வஷேம் நினைவிடத்திற்கு பிரதமர் மோடி சென்றார்.

யாத் வஷேம் என்பது 2-ம் உலகப்போரின்போது ஜெர்மனியை ஆட்சி செய்த ஹிட்லரின் நாஜி படைகளால் கொன்று குவிக்கப்பட்ட சுமார் 60 லட்சம் யூதர்களுக்காக ஜெருசலேமில் அமைக்கப்பட்டுள்ள நினைவிடம் ஆகும். அந்த நினைவிடத்தில் இன்று பிரதமர் மோடி மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

இதனை தொடர்ந்து இஸ்ரேல் அதிபர் ஈசாக் ஹெர்சாக்கை பிரதமர் மோடி இன்று சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது இந்தியா-இஸ்ரேல் இடையிலான கல்வி, வேலைவாய்ப்பு, புத்தாக்கம், தொலை தொடர்பு உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து இரு தலைவர்களும் ஆலோசித்தனர்.

இதன் பின்னர் பாதுகாப்பு, வர்த்தகம், தொழில்நுட்பம் மற்றும் விவசாயம் ஆகிய துறைகளில் இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது குறித்து பிரதமர் மோடி, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் விரிவான பேச்சுவார்த்தை நடத்தினார்.

இதையடுத்து இந்தியா-இஸ்ரேல் இடையே விவசாயம், கல்வி, வணிகம், செயற்கை நுண்ணறிவு, மீன்வளம் உள்ளிட்ட துறைகளில் பரஸ்பர ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. பிரதமர் மோடி மற்றும் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு முன்னிலையில் இருநாட்டு வெளியுறவுத்துறை மந்திரிகளும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

தொடர்ந்து செய்தியாளர் சந்திப்பில் பேசிய பிரதமர் மோடி, “உலகத்தில் பயங்கரவாதத்திற்கு எங்கும் இடமில்லை என்பதில் இந்தியாவும், இஸ்ரேலும் உறுதியாக உள்ளன. மேற்கு ஆசியாவில் அமைதி நிலவ வேண்டும். அது இந்தியாவின் பாதுகாப்புடன் தொடர்புடையது. காசா அமைதி ஒப்பந்தம் உள்ளிட்ட அமைதிக்கான முயற்சிகளை இந்தியா ஆதரிக்கிறது” என்று தெரிவித்தார்.

இந்த நிலையில், இஸ்ரேல் சுற்றுப்பயணத்தை நிறைவு செய்த பிரதமர் மோடி, விமானம் மூலம் இந்தியாவிற்கு புறப்பட்டார். அவரை பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் அவரது மனைவி சாரா ஆகியோர் விமான நிலையத்தில் வழியனுப்பி வைத்தனர். பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்தின்போது, இரு நாடுகளுக்கு இடையில் பல்வேறு துறைகளில் மொத்தம் 27 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com