

டெல் அவிவ்
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகளின் தாக்குதல்களால் ஈரான் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. ஈரான் நாட்டுக்கு ஆதரவாக ஹிஸ்புல்லா அமைப்பு போரில் ஈடுபட்டு வருகிறது. லெபனானில் இருந்து அதன் உறுப்பினர்கள் தாக்குதல்களில் ஈடுபட்டு வருகின்றனர். லெபனானில் ஹிஸ்புல்லாவின் உள்கட்டமைப்புகளை இலக்காக கொண்டு இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது.
லெபனான் மற்றும் இஸ்ரேல் ராணுவ அதிகாரிகள், அமெரிக்காவின் தலைநகரம் வாஷிங்டன் டி.சி.யில் மே மாத இறுதியில், முதன்முறையாக பாதுகாப்பு பேச்சுவார்த்தையை நடத்த உள்ளனர் என சமீபத்தில் தகவல் வெளியானது. எனினும், ஹிஸ்புல்லா அமைப்பு இந்த பேச்சுவார்த்தையை புறக்கணிக்கும் என கூறப்பட்டது.
இந்த சூழலில், வடக்கு இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா அமைப்பு தாக்குதல் நடத்தியுள்ளது என கூறப்படுகிறது. இதனை குற்றச்சாட்டாக தெரிவித்து உள்ள இஸ்ரேல், வடக்கு இஸ்ரேல் மீது நடத்தப்படும் தாக்குதலை ஹிஸ்புல்லா நிறுத்த வேண்டும். அப்படி இல்லையெனில், பெய்ரூட்டை இலக்காக கொண்டு எங்களுடைய படைகள் தாக்குதல் நடத்தும் என கடுமையாக கூறினார்.
லெபனான் தலைநகர் பெய்ரூட்டுக்குள் இஸ்ரேல் படைகள் நுழையாது என்று அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் நேற்று மாலை அறிவிப்பு வெளியிட்டார். இரு நாடுகளும், பரஸ்பர பகைமைகளை தவிர்த்து விடும் என்றும் இருதரப்பும் தற்காலிக போர் நிறுத்தம் மேற்கொள்வார்கள் என்றும் கூறினார்.
இந்த சூழலில், இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு அளித்துள்ள விளக்கத்தில், டிரம்ப்புடன் நான் பேசினேன். அப்போது, எங்களுடைய நகரங்கள் மீதும், குடிமக்கள் மீதும் நடத்தும் தாக்குதலை ஹிஸ்புல்லா நிறுத்தவில்லை என்றால், பெய்ரூட்டில் உள்ள பயங்கரவாத நிலைகளை இஸ்ரேல் தாக்கும். இந்த நிலைப்பாட்டில் மாற்றமிருக்காது என கூறினேன் என தெரிவித்து உள்ளார். இதனால், மீண்டும் லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தக்கூடும் என்ற பதற்ற நிலை எழுந்துள்ளது.