இஸ்ரேல் பாதுகாப்பு படை - பாலஸ்தீனியர்கள் இடையே துப்பாக்கிச்சண்டை; 2 பேர் பலி

இஸ்ரேலிய பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 2 பாலஸ்தீனியர்கள் உயிரிழந்தனர்.
இஸ்ரேல் பாதுகாப்பு படை - பாலஸ்தீனியர்கள் இடையே துப்பாக்கிச்சண்டை; 2 பேர் பலி
Published on

ஜெருசலேம்,

இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் போக்கு நிலவி வருகிறது. பாலஸ்தீனத்தின் மேற்குகரை மற்றும் காசா முனை பகுதியில் இருந்து இஸ்ரேல் மீது அவ்வப்போது தாக்குதல் சம்பவங்களும் அரங்கேறி வருகிறது. இதற்கு இஸ்ரேல் தரப்பிலும் பதில் தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. காசா முனை பகுதியை ஹமாஸ் அமைப்பு நிர்வகித்து வருகிறது.

அதேவேளை மேற்குகரை பகுதி பாலஸ்தீன அதிபர் முகமது அப்பாஸ் நிர்வகித்து வருகிறார். ஹமாஸ் அமைப்பை இஸ்ரேல் பயங்கரவாத அமைப்பாக கருதுகிறது. ஹமாஸ் போன்று மேலும் பல ஆயுதமேந்திய குழுக்களும் மேற்குகரை மற்றும் காசா முனையில் செயல்பட்டு வருகிறது. இந்த ஆயுதமேந்திய குழுக்களை இஸ்ரேல் பயங்கரவாத அமைப்புகளாக கருதி தாக்குதல் நடத்தி வருகிறது.

இதனிடையே, மேற்குகரையின் சில பகுதிகள் இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த பகுதிகளில் இஸ்ரேலிய பாதுகாப்பு படையினருக்கும், பாலஸ்தீனிய ஆயுதக்குழுக்களுக்கும் இடையே அவ்வப்போது மோதல் சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. குறிப்பாக, மேற்குகரையின் நப்லஸ், ஜெனின் நகரங்களில் கடந்த சில நாட்களாக மோதல் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.

ஜெனின் நகரில் உள்ள அகதிகள் முகாமில் இஸ்ரேல் பயங்கரவாத இயக்கமாக கூறும் பாலஸ்தீன ஆயுதமேந்திய குழுக்களின் ஆதிக்கம் அதிக அளவில் உள்ளது.

இந்நிலையில், மேற்குகரையின் ஜெனின் நகரில் உள்ள அகதிகள் முகாமில் இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் இன்று காலை அதிரடி சோதனை நடத்தினர். பாதுகாப்பு படையினரால் தேடப்படும் குற்றவாளியை கைது செய்ய இந்த சோதனை நடைபெற்றது.

அப்போது, இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் மீது துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலுக்கு பதிலடியாக இஸ்ரேல் படையினரும் பதிலடி தாக்குதல் நடத்தினர். இரு தரப்புக்கும் இடையே நடந்த துப்பாக்கிச்சூட்டில் 2 பாலஸ்தீனர்கள் உயிரிழந்தனர். மேலும், 11 பேர் படுகாயமடைந்தனர்.

இஸ்ரேல் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் அகமது முகமது தரஹ்மிஹ் (வயது 17), மஹ்மத் அஸ் சுஸ் (வயது 17) உயிரிழந்ததாக பாலஸ்தீன சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இதனிடையே, 2 பாலஸ்தீனர்கள் உயிரிழந்தது தொடர்பாக பாலஸ்தீன ஆயுதக்குழுவான இஸ்லாமிக் ஜிகாத் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆக்கிரமிப்பு அதன் குற்றத்தை அதிகரிக்கும்போது, அதன் எதிர்ப்பு அளவு கடுமையாக இருக்கும்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com