

ஜெருசலேம்,
2 நாட்கள் அரசுமுறை பயணமாக பிரதமர் மோடி நேற்று இஸ்ரேல் சென்றார். டெல்லியில் இருந்து நேற்று காலை தனி விமானம் மூலம் புறப்பட்ட பிரதமர் மோடி மாலை 4.30 மணியளவில் இஸ்ரேல் சென்றார். இஸ்ரேலின் பென் குரின் சர்வதேச விமான நிலையம் சென்ற பிரதமர் மோடியை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு விமான நிலையத்திற்கே நேரில் சென்று வரவேற்றார். பெஞ்சமின் நெதன்யாகுவுடன் அவரது மனைவி சாராவும் உடன் இருந்தார். பிரதமர் மோடி இஸ்ரேல் செல்வது இது 2வது முறையாகும்.
பின்னர் பிரதமர் மோடிக்கு பாரம்பரிய அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது. இதையடுத்து இருநாட்டு பிரதமர்களும் விமான நிலையத்திலேயே தனிப்பட்ட முறையில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். குறிப்பாக, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், புத்தாக்கம், விவசாயம், நீர் மேலாண்மை, ராணுவம் மற்றும் பாதுகாப்பு, வர்த்தகம் மற்றும் முதலீடு, மக்களிடையே யான உறவுகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இருதரப்பு ஒத்து ழைப்பை மேலும் வலுப்படுத்துவது குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர்.
இதனைத்தொடர்ந்து பிரதமர் மோடி, நேற்று மாலை அந்த நாட்டு நாடாளுமன்றத்தில் உரையாற்றினார். அப்போது கடந்த 2023-ம் ஆண்டு இஸ்ரேலில் ஹமாஸ் அமைப்பினர் நடத்திய தாக்குதலை குறிப்பிட்டு, பேசினார். இதுதொடர்பாக தனது உரையின்போது, “140 கோடி இந்தியர்களின் வாழ்த்துகள் மற்றும் நட்புறவு, மரியாதையின் செய்தியை என்னுடன் கொண்டு வந்திருக்கிறேன். இஸ்ரேலில் கடந்த 2023-ம் ஆண்டு ஹமாஸ் அமைப்பினர் நடத்திய காட்டுமிராண்டித்தனமான தாக்குதல் கண்டனத்துக்குரியது. அதனால் ஏற்பட்ட உங்கள் வலியை நாங்களும் உணர்ந்தோம்.
உங்கள் துயரத்தை நாங்களும் பகிர்ந்து கொண்டோம். பொதுமக்களை கொலை செய்வதையும், பயங்கரவாதத்தையும் எந்த காரணத்தைக்கொண்டும் நியாயப்படுத்த முடியாது. இந்த தருணத்தில் இந்தியா முழு நம்பிக்கையுடன் இஸ்ரேலுடன் உறுதியாக நிற்கிறது.
மும்பையில் இஸ்ரேல் குடிமக்கள் உள்பட அப்பாவி மக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை நாங்கள் நினைவுகூருகிறோம். உங்களைப்போல நாங்களும் பயங்கரவாதத்துக்கு எதிரான, சமரசமற்ற கொள்கையை கடைப்பிடிக்கிறோம். சமூகங்களை சீர்குலைத்து, வளர்ச்சியை தடுப்பது மற்றும் நம்பிக்கையை குலைப்பதையே பயங்கரவாதம் நோக்கமாக கொண்டுள்ளது. இதை எதிர் கொள்ள உலகளாவிய நடவடிக்கை தேவை.
அதனால்தான் காசா அமைதி திட்டத்தை இந்தியா ஆதரிக்கிறது. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலால் ஒப்புக்கொள்ளப்பட்ட இந்த அமைதி திட்டம் அமைதிக்கான பாதையை வழங்குகிறது. அது பாலஸ்தீனப் பிரச்சினையைத் தீர்ப்பது உள்பட, இந்த பிராந்தியத்தின் அனைத்து மக்களுக்கும் நீதியான மற்றும் நீடித்த அமைதியை உறுதி செய்யும் என்று நாங்கள் நம்புகிறோம்.
நமது அனைத்து முயற்சிகளும் ஞானம், தைரியம் மற்றும் மனிதநேயத் தால் வழிநடத்தப்படட்டும். அமைதிக்கான பாதை எப்போதும் எளிதானது அல்ல, ஆனால் இந்த பிராந்தியத்தில் உரையாடல், அமைதி மற்றும் நிலைத்தன்மைக்காக இந்தியா உங்களுடனும் உலகத்துடனும் இணைகிறது” என்று அவர் கூறினார்.
இந்த உரைக்குப்பின் பிரதமர் மோடிக்கு 'நெசெட் சபாநாயகர்' பதக்கம் வழங்கப்பட்டது. இதை அந்நாட்டு நாடாளுமன்ற சபாநாயகர் அமினர் ஒகானா வழங்கினார்.
இஸ்ரேல் நாடாளுமன்றத்தின் உயரிய இந்த பதக்கத்தை பெறும் முதலாவது இந்திய பிரதமர் மோடி ஆவார். அதைப்போல இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய முதல் இந்திய பிரதமரும் மோடி என்பதும் குறிப்பிடத்தக்கது.
அமெரிக்கா-ஈரான் இடையே நீடிக்கும் போர் பதற்றம் உள்ளிட்ட சிக்கல்களால் மத்திய கிழக்கில் பதற்றம் நிலவி வரும் சூழலில் பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணம் குறிப்பிடத்தக்கதாக அமைந்துள்ளது.