

ஜெருசலேம்,
டெலிகாம் வழக்கில் பிரதமர் பெஞ்சமின் நேட்டன்யாஹூவிடம் போலீஸ் விசாரணை மேற்கொள்கிறது என இஸ்ரேலிய மீடியா செய்தி வெளியிட்டு உள்ளது. அந்நாட்டின் ராணுவ ரேடியோ மற்றும் பிற மீடியாக்கள் பெஞ்சமின் நேட்டன்யாஹூவின் வீட்டிற்கு போலீஸ் சென்று உள்ளது என செய்தி வெளியிட்டு உள்ளன. நேட்டன்யாஹூ மனைவி சாராவிடம் போலீசார் வேறு ஒரு இடத்தில் வைத்து விசாரணையை மேற்கொள்கிறார்கள் என செய்திகள் வெளியாகி உள்ளது. பேஸிக் இஸ்ரேலி டெலிகாம் நிறுவனம் தன்னுடைய செய்தி இணையதளத்தில் பெஞ்சமின் நேட்டன்யாஹூ மற்றும் அவருடைய மனைவி சாராவிற்கு ஆதரவாக செய்தியை வெளியிட டெலிகாம் விதிமுறையில் சாதகமாக செயல்பட்டதாக புதிய வழக்கு விசாரணையை போலீஸ் மேற்கொள்கிறது என முதல்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளது.
இதுதொடர்பாக அந்நாட்டு போலீஸ் பெஞ்சமின் நேட்டன்யாஹூவிற்கு மிகவும் நம்பிக்கையான இருவரை கடந்த வாரம் கைது செய்தது.
கடந்த வருடம் வரையில் தொலைதொடர்பு துறையை தன்வசம் வைத்திருந்த பெஞ்சமின் நேட்டன்யாஹூவிடம் போலீஸ் விசாரிக்கிறது.
ஏற்கனவே இரண்டு ஊழல் வழக்குகளுடன் இப்போது லஞ்சம் வழங்கியது என்பது தொடர்பான தீவிரமான குற்றச்சாட்டுகள் காரணமாக 4வது முறை பிரதமராக பதவி வகிக்கும் பெஞ்சமின் நேட்டன்யாஹூவிற்கு பெரும் எச்சரிக்கையாக எழுந்து உள்ளது. அனைத்து வழக்குகளிலும் தன்னுடைய தவறு எதுவும் கிடையாது என பெஞ்சமின் நேட்டன்யாஹூ மறுத்துவிட்டார். இப்போது ஏற்பட்டு உள்ள நகர்வு தொடர்பாக போலீஸ் பதிலளிக்க மறுத்துவிட்டது.
ஏற்கனவே பெஞ்சமின் நேட்டன்யாஹூ பேசுகையில் பதவி விலக மாட்டேன் என கூறியிருந்தார். நம்முடைய எதிர்காலத்தை உறுதிசெய்கிற விதத்தில் இஸ்ரேலை தொடர்ந்து வழிநடத்திச் செல்லுகிற பெரும் கடமை எனக்கு உள்ளது என உணர்கிறேன். கடந்த கால கட்டங்களில் 15 விசாரணைகளை நான் சந்தித்து உள்ளேன். ஆனால் அவற்றின் முடிவில் எதுவும் நடந்து விடவில்லை. இப்போதும் எதுவும் நடந்துவிடாது என சமீபத்தில் டெலிவிஷனில் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய நேட்டன்யாஹூ கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.