லெபனானில் இயேசு சிலையை சேதப்படுத்திய இஸ்ரேல் வீரர்; இஸ்ரேல் மந்திரி கடும் கண்டனம்

லெபனான் மற்றும் இஸ்ரேல் இடையே 10 நாட்களுக்கு தற்காலிக போர்நிறுத்த உடன்பாடு ஏற்பட்டு உள்ளது.
லெபனானில் இயேசு சிலையை சேதப்படுத்திய இஸ்ரேல் வீரர்; இஸ்ரேல் மந்திரி கடும் கண்டனம்
Published on

டெல் அவிவ்

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகளுக்கு எதிரான போரில், ஈரானுக்கு ஆதரவாக ஹிஸ்புல்லா அமைப்பு லெபனானில் இருந்து செயல்பட்டது. இஸ்ரேல் மீது தாக்குதலை தொடுத்தது. இதனால், பதிலடியாக லெபனானை இஸ்ரேல் தாக்கியது. இதில், லெபனான் நாட்டில் பொதுமக்கள் பலர் பலியானார்கள். உடனடியாக போர்நிறுத்த உடன்பாடு ஏற்படுத்த வேண்டும் என்று இஸ்ரேலிடம் லெபனான் கோரி வந்தது.

இந்த நிலையில், லெபனான் ஜனாதிபதி ஜோசப் ஆவன் மற்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஆகிய இருவரும், சிறந்த முறையில் பேச்சுவார்த்தை நடத்தி, பெரிய அளவில் தீர்வு ஒன்று ஏற்படுவதற்கான நடவடிக்கையாக, இரு தலைவர்களும் தற்காலிக ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்தி கொள்ள முடிவு செய்துள்ளனர்.

இதனை அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் உறுதிப்படுத்தி உள்ளார். இதன்படி, லெபனான் மற்றும் இஸ்ரேல் இடையே 10 நாட்களுக்கு தற்காலிக போர்நிறுத்த உடன்பாடு ஏற்பட்டு உள்ளது.

இந்த நிலையில், தெற்கு லெபனானில் இஸ்ரேல் பாதுகாப்பு படையை சேர்ந்த வீரர் ஒருவர், சிலுவையில் அறையப்பட்ட இயேசுவின் சிலை ஒன்றை சேதப்படுத்த கூடிய புகைப்படம் ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. இதுபற்றி இஸ்ரேல் ராணுவம் விசாரணை மேற்கொண்டு வருகிறது.

கிறிஸ்தவ மத அடையாளத்திற்கு பாதிப்பு ஏற்படும் வகையில், நடந்து கொண்ட இந்த சம்பவத்திற்கு இஸ்ரேல் வெளிவிவகார துறை மந்திரி கிதியோன் சார் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார்.

எங்களுடைய மதிப்புக்கு உரிய விசயங்களில் இருந்து முற்றிலும் முரணான செயல் இது. அனைத்து மதங்களையும், அவர்களுடைய புனித அடையாளங்களையும் இஸ்ரேல் மதிக்கிறது என்று வலியுறுத்தி கூறிய அவர், இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து, இந்த விவகாரம் பற்றி இஸ்ரேல் பாதுகாப்பு படை விசாரணை நடத்தி வருவதற்காக பாராட்டுகளையும் தெரிவித்து கொண்டார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com