காசாவின் ஷிபா மருத்துவமனையில் இருந்து இஸ்ரேல் படைகள் வெளியேறின

ஹமாஸ் அமைப்பினர் சுமார் 200 பேர் கொல்லப்பட்டதாகவும், நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டதாகவும் இஸ்ரேல் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காசாவின் ஷிபா மருத்துவமனையில் இருந்து இஸ்ரேல் படைகள் வெளியேறின
Published on

ஹமாஸ் அமைப்பினரை குறிவைத்து காசா முனையில் தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேல் படைகள், காசாவின் வடக்கு பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளனர். வான் தாக்குதல், தரைவழி தாக்குதல், கடல் வழி தாக்குதல் என மும்முனை தாக்குதல்களில் 32,845 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

இஸ்ரேல் படையெடுப்பு காரணமாக இடம்பெயர்ந்த பல லட்சம் மக்கள், தெற்கு முனையில் உள்ள ரபா நகரில் தஞ்சம் அடைந்துள்ளனர். அவர்களை வெளியேற்றிவிட்டு தாக்குதலைத் தொடங்க இஸ்ரேல் திட்டமிட்டுள்ளது. ஹமாஸ் அமைப்பினரை முற்றிலும் ஒழிக்கும் தங்களின் இலக்கை எட்டுவதற்கு ரபா மீதான தாக்குதல் முக்கியமானதாக இஸ்ரேல் கருதுகிறது.

இதற்கிடையே, காசா பகுதியில் உள்ள மிகப்பெரிய மருத்துவமனையான ஷிபா மருத்துவமனை வளாகத்திற்குள் இஸ்ரேல் படைகள் கடந்த மாதம் தாக்குதலை தொடங்கியது. ஹமாஸ் அமைப்பினரும் உள்ளே இருந்து பதில் தாக்குதல் நடத்தினர். இரண்டு வாரங்களாக நடந்த சண்டை இன்று முடிவடைந்தது. இன்று அதிகாலையில் இஸ்ரேல் படைகள் அங்கிருந்து வெளியேறின. இந்த தாக்குதலில் ஹமாஸ் அமைப்பினர் சுமார் 200 பேர் கொல்லப்பட்டதாகவும், நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டதாகவும் இஸ்ரேல் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஷிபா மருத்துவமனை மீதான தாக்குதலில் கிடைத்த வெற்றியானது, சுமார் ஆறு மாத கால போரில் கிடைத்த பெரும் வெற்றியாக இஸ்ரேல் ராணுவம் கூறுகிறது. காசாவில் உள்ள பணயக் கைதிகளை மீட்டு கொண்டு வர வலியுறுத்தி இஸ்ரேல் நாட்டில் பிரதமர் நெதன்யாகுவுக்கு எதிராக மக்கள் பெரிய அளவில் ஆர்ப்பாட்டம் நடத்திய நிலையில், இந்த வெற்றி அறிவிப்பை இஸ்ரேல் வெளியிட்டிருக்கிறது.

கடுமையாக பாதிக்கப்பட்டு பின்னடைவை சந்தித்த பகுதிகளில் கூட ஹமாஸ் இன்னும் எதிர்ப்பை வெளிப்படுத்த முடியும் என்பதை இந்த சண்டை காட்டுகிறது. வடக்கு காசாவில் ஹமாஸ் அமைப்பினரை பெருமளவில் அழித்துவிட்டதாகவும், கடந்த ஆண்டு இறுதியில் ஆயிரக்கணக்கான வீரர்களை திரும்பப் பெற்றதாகவும் இஸ்ரேல் கூறியது. இதன்மூலம் அப்பகுதியில் பாதுகாப்பு வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. இதனால் உதவி தேவைப்படும் மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்குவது கடினமாகிவிட்டது.

ஷிபா மருத்துவமனை வளாகத்தில் மூத்த ஹமாஸ் நிர்வாகிகள் மற்றும் நவம்பரில் நடத்தப்பட்ட முந்தைய தாக்குதலுக்குப் பிறகு அங்கு மீண்டும் கூடியிருந்த பிற போராளிகள் கொல்லப்பட்டதாகவும், அவர்களிடம் இருந்து ஆயுதங்கள் மற்றும் உளவு சாதனங்கள் கைப்பற்றப்பட்டதாகவும் ராணுவம் கூறியது.

இந்த சண்டையின்போது 20-க்கும் மேற்பட்ட நோயாளிகள் இறந்தனர் என்றும், பலர் காயமடைந்து ஆபத்தான கட்டத்தில் இருப்பதாகவும் ஐ.நா. சுகாதார அமைப்பு கூறி உள்ளது. 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com