'அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல் போர்க்குற்றத்திற்கு சமமானது' - ஐ.நா. அமைப்பு

இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹமாஸ் அமைப்பின் முக்கிய தளபதி இப்ராஹிம் பியாரி உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
'அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல் போர்க்குற்றத்திற்கு சமமானது' - ஐ.நா. அமைப்பு
Published on

டெல் அவிவ்,

இஸ்ரேல்-ஹமாஸ் இடையேயான போர் இன்று 27-வது நாளாக தொடர்ந்து நீடிக்கிறது. கடந்த காலங்களில் இருதரப்புக்கும் இடையில் ஏற்பட்ட 4 போர்களை விடவும் இந்த போர் அதிக உயிரிழப்புகளையும், கடுமையான மனிதாபிமான நெருக்கடியையும் ஏற்படுத்தி வருகிறது.

எனவே காசாவில் மனிதாபிமான அடிப்படையில் போரை நிறுத்த வலியுறுத்தி ஐ.நா. பொதுசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் அதை திட்டவட்டமாக நிராகரித்த இஸ்ரேல், ஹமாசை முழுவதுமாக ஒழிக்கும் வரை ஓயமாட்டோம் என சபதம் செய்து போரை தொடர்ந்து வருகிறது.

இந்த நிலையில், இஸ்ரேல் ராணுவம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ஹமாஸ் அமைப்பின் முக்கிய தளபதி இப்ராஹிம் பியாரி, விமானப்படை மூலம் நடத்தப்பட்ட தாக்குதலில் உயிரிழந்தார் எனவும், இந்த தாக்குதலில் அந்த அமைப்பைச் சேர்ந்த பல பயங்கரவாதிகள் உயிரிழந்ததுடன், ஹமாஸ் அமைப்பின் அலுவலகம் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளும் சேதமடைந்ததாகவும் கூறப்பட்டு உள்ளது.

இதனிடையே, சர்வதேச ஊடகம் வெளியிட்ட செய்தி ஒன்றில், காசா முனையில் அகதிகள் அதிகம் வசிக்கும் முகாம் மீது இஸ்ரேல் விமானப்படை தாக்குதல் நடத்தியதாகவும், அதில் 50 பாலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளதாகவும் கூறியுள்ளது. அதே சமயம் ஹமாஸ் அமைப்பு சார்பில் வெளியிடப்பட்ட தகவலின்படி, 195 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாகவும், 777 பேர் காயமடைந்துள்ளதாகவும், 120-க்கும் அதிகமானோர் இடிபாடுகளில் சிக்கி இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த தாக்குதல் தொடர்பாக ஐ.நா. மனித உரிமைகள் அமைப்பின் 'எக்ஸ்' வலைதள பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள பதிவில், "அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் அதிக எண்ணிக்கையிலான பொதுமக்கள் உயிரிழந்ததையும், அங்கு ஏற்பட்டுள்ள அழிவின் அளவையும் கருத்தில் கொண்டு, இவை போர்க்குற்றங்களுக்கு சமமான தாக்குதல்கள் என கருதுகிறோம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com