ஈரானின் புதிய தலைவராக ‘யாரை தேர்ந்தெடுத்தாலும் கொன்று விடுவோம்..” - இஸ்ரேல் சூளுரை

ஈரானுக்கு எதிரான இஸ்ரேலின் இந்த மிரட்டல் மேலும் பதற்றத்தை அதிகரித்து உள்ளது.

ஈரானின் புதிய தலைவராக ‘யாரை தேர்ந்தெடுத்தாலும் கொன்று விடுவோம்..” - இஸ்ரேல் சூளுரை
Published on

துபாய்,

ஈரான் மீது கடந்த 28-ந்தேதி போரை தொடங்கிய அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள். அந்த நாட்டு உச்சபட்ச தலைவராக இருந்த அயதுல்லா அலி காமேனியை படுகொலை செய்தது. அவருடன், அவரது மகள், மருமகன், பேத்தி உள்ளிட்டோர் கொல்லப்பட்டனர். காயங்களுடன் சிகிச்சை பெற்றுவந்த காமேனியின் மனைவி கோஜஸ்தேஹ் பாகெர்ஸதேவும் உயிரிழந்தார்.

இதைத்தொடர்ந்து புதிய உச்சபட்சத்தலைவரை தேர்ந்தெடுக்கும் பணிகளை ஈரான் முடுக்கி விட்டுள்ளது. இதில் காமேனியின் மகன் மோஜ்தபா காமேனி தேர்வாகி இருப்பதாக கூறப்படுகிறது. புரட்சிகர இஸ்லாமியப் படைகளில் அழுத்தத்தின் பேரில் இத்தேர்வு நடந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் ஈரானின் புதிய உச்சபட்ச தலைவராக யாரை தேர்ந்தெடுத்தாலும் கொன்று விடுவோம் என இஸ்ரேல் மிரட்டல் விடுத்து உள்ளது. இதுகுறித்து அந்த நாட்டு ராணுவ மந்திரி இஸ்ரேல் காட்ஸ் தனது எக்ஸ் தளத்தில், 'இஸ்ரேலை அழித்தல், அமெரிக்காவையும், சுதந்திர உலகையும் பிராந்திய நாடுகளையும் அச்சுறுத்துதல், ஈரானிய மக்களை அடக்குதல் போன்ற திட்டங்களை தொடரவும், வழிநடத்தவும் ஈரானிய பயங்கரவாத ஆட்சியால் நியமிக்கப்படும் ஒவ்வொரு தலைவரும் அழிக்கப்படுவதற்கு இலக்காக இருப்பார்கள். அவரது பெயர் என்ன? எங்கே மறைந்திருக்கிறார்? என்பதெல்லாம் எங்களுக்கு கவலை இல்லை.

அவர் எங்கு பதுங்கியிருந்தாலும் அவரைத் தேடி அடிப்போம். இதற்காக, நாங்கள் அமெரிக்காவுடன் இணைந்து முழு பலத்துடன் செயல்படுவோம். தற்போதைய ஈரான் ஆட்சி தன்னை மீள்கட்டமைப்பதற்கான வாய்ப்புகளை நசுக்குவோம். ஈரானிய மக்கள் இந்த ஆட்சியை தூக்கி எரிந்துவிட்டு புதிய ஆட்சியை அமைக்கும் சூழலை உருவாக்குவோம்' என குறிப்பிட்டு இருந்தார்.

மேலும், “இஸ்ரேலிய பிரதமருக்கும், இஸ்ரேலியப் படைகளுக்கும், எப்போதும் தயார் நிலையில் இருக்கும்படியும், போரில் அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளும்படியும் அறிவுறுத்தியுள்ளேன்” என்று காட்ஸ் தெரிவித்துள்ளார்.

ஈரானுக்கு எதிரான இஸ்ரேலின் இந்த மிரட்டல் மேலும் பதற்றத்தை அதிகரித்து உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com