அதிரடி தாக்குதலுக்கு தயாராகும் இஸ்ரேல் தரைப்படை.. ரபா நகரில் இருந்து மக்களை வெளியேற்ற திட்டம்

ஹமாஸ் அமைப்புக்கு எதிராக முழுமையான வெற்றியை பெறுவதற்கு ரபா மீது தரைவழி தாக்குதல் அவசியம் என்று இஸ்ரேல் பிரதமர் கூறியுள்ளார்.
அதிரடி தாக்குதலுக்கு தயாராகும் இஸ்ரேல் தரைப்படை.. ரபா நகரில் இருந்து மக்களை வெளியேற்ற திட்டம்
Published on

ஜெருசலேம்:

காசா முனையை ஆட்சி செய்யும் ஹமாஸ் அமைப்பினரை முற்றிலும் ஒழிக்க இஸ்ரேல் தீவிரமாக தாக்குதல் நடத்தி வருகிறது. இஸ்ரேல் படைகள்- ஹமாஸ் அமைப்பினர் இடையே பல ஆண்டுகளாக சண்டை நடந்தாலும், கடந்த ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி இஸ்ரேல் பகுதிக்குள் புகுந்து ஹமாஸ் நடத்திய கொடூர தாக்குதலானது, முழு அளவிலான போருக்கு வழிவகுத்தது. ஹமாஸ் நடத்திய அதிரடி தாக்குதலில் 1,200 இஸ்ரேல் மக்கள் உயிரிழந்தனர். 240 பேரை ஹமாஸ் அமைப்பினர் பணய கைதிகளாக பிடித்து, காசா முனைக்கு கொண்டு சென்றனர்.

ஹமாசின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேல் ராணுவம் காசா முனை மீது முதலில் வான் தாக்குதல் நடத்தியது. பின்னர் தரைப்படையினர் காசா முனைக்குள் நுழைந்து தாக்குதல் நடத்துகின்றனர். இந்த தாக்குதலில் ஹமாஸ் அமைப்பினர், பாலஸ்தீன மக்கள் என 29 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 69 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் காயமடைந்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இஸ்ரேல் தரைப்படையினர் வடக்கில் இருந்து தெற்கு நோக்கி கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி தாக்குதல் நடத்தி, அப்பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளனர். சண்டை நடந்த பகுதிகளில் இருந்து வெளியேற்றப்பட்ட பொதுமக்கள், புகலிடம் தேடி தெற்கு நோக்கி சென்றனர். தற்போது தெற்கு முனையில் எகிப்து எல்லையை ஒட்டியுள்ள ரபா நகரில் ஏராளமான மக்கள் முடங்கி உள்ளனர்.

ஹமாஸ் அமைப்புக்கு எதிராக முழுமையான வெற்றி கிடைக்கும் வரை போர் தொடரும் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு சபதம் எடுத்துள்ளார். முழுமையான வெற்றியை பெறுவதற்கு ரபா மீது தரைவழி தாக்குதல் அவசியம் என்றும் கூறியுள்ளார். இதையடுத்து, ரபா நகரை நோக்கி இஸ்ரேல் ராணுவத்தின் தரைப்படை முன்னேற திட்டமிட்டுள்ளது.

இதற்கான முதற்கட்ட நடவடிக்கையாக, அங்கிருந்து மக்களை வெளியேற்றுவதற்கான திட்டத்தை இஸ்ரேல் ராணுவம் முன்மொழிந்துள்ளது.

காசா பகுதியில் போர் நடக்கும் பகுதிகளிலிருந்து மக்களை வெளியேற்றும் திட்டம் மற்றும் அடுத்தகட்ட ராணுவ செயல்பாட்டு திட்டத்தை ராணுவம் தாக்கல் செய்திருப்பதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அலுவலகம் இன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஆனால், பொதுமக்கள் எப்படி, எந்த பகுதிக்கு மாற்றப்படுவார்கள்? என்பது குறித்த எந்த விவரமும் அந்த அறிக்கையில் இல்லை.

இஸ்ரேல் படைகள் இதுவரை கால்பதிக்காத ரபா நகரில் இப்போது சுமார் 14 லட்சம் பாலஸ்தீனர்கள் உள்ளனர். அவர்களில் பெரும்பாலானவர்கள், வேறு இடங்களில் இருந்து வந்தவர்கள். இந்த நகரை இஸ்ரேல் தரைப்படை சுற்றி வளைத்து தாக்கினால் ஏராளமான மக்கள் கொல்லப்படுவார்கள் என, வெளிநாடுகள் மற்றும் மனிதநேய உதவி அமைப்புகள் கவலை தெரிவித்துள்ளன. 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com