சீன அரசை விமர்சித்த 'அலிபாபா' நிறுவனர் ஜாக் மா ஜப்பானில் தஞ்சமா?

சீன அரசை விமர்சித்த ‘அலிபாபா’ நிறுவனர் ஜாக் மா, ஜப்பானில் தஞ்சமடைந்துள்ளாரா என்பது குறித்து தகவல் வெளியாகி உள்ளது.
Image Courtacy:AFP
Image Courtacy:AFP
Published on

டோக்கியோ,

சீனாவை சேர்ந்த பிரபல ஆன்லைன் வர்த்தக நிறுவனம் அலிபாபா. இதன் நிறுவனர் ஜாக் மா. இவரது நிறுவனத்தின் மீது அதிபர் ஜின்பிங் தலைமையிலான அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது.

இதனால் அதிருப்தி அடைந்த ஜாக் மா கடந்த 2020-ம் ஆண்டு அக்டோபர் மாதம் ஷாங்காய் நகரில் நடந்த ஒரு வர்த்தக மாநாட்டில் சீன அரசை கடுமையாக விமர்சனம் செய்தார்.

இந்த சம்பவத்துக்கு பின் ஜாக் மா திடீரென மாயமானார். பல மாதங்கள் அவர் பொதுவெளியில் தோன்றாமல் போனார். அதை தொடர்ந்து சீன அரசு அவரை கைது செய்ததாகவும், அவர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் பல்வேறு வதந்திகள் பரவின. எனினும் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் சீனாவில் 100 ஆசிரியர்களுடன் காணொலி காட்சி வாயிலாக நடந்த ஒரு சந்திப்பில் ஜாக் மா தோன்றி வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். அதே சமயம் அவர் எங்கு இருக்கிறார் என்பது தொடர்ந்து மர்மமாகவே இருந்தது.

இந்த நிலையில் ஜாக் மா ஜப்பானில் தஞ்சமடைந்துள்ளதாகவும், அங்கு அவர் கடந்த 6 மாதங்களாக தனது குடும்பத்துடன் வசித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. ஜாக் மாவுக்கு நெருக்கமானவர்கள் வழங்கிய தகவல்களை மேற்கோள்காட்டி பிரபல ஜப்பான் செய்தி நிறுவனம் இதனை தெரிவித்துள்ளது. ஜாக் மா ஜப்பானின் தலைநகர் டோக்கியோவில் தங்கியிருப்பதாகவும், அவர் அடிக்கடி அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகளுக்கு சென்றுவருவதாகவும் அந்த செய்தி நிறுவனம் கூறியுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com