இலங்கையில் நடைபெற்ற பிம்ஸ்டெக் கூட்டத்தில் கடல்சார் ஒத்துழைப்பை தீவிரப்படுத்த இந்தியா வலியுறுத்தல்!

வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் இன்று நடைபெற்ற “பல்துறை தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கான(பிம்ஸ்டெக்)” கூட்டத்தில் பங்கேற்றார்.
இலங்கையில் நடைபெற்ற பிம்ஸ்டெக் கூட்டத்தில் கடல்சார் ஒத்துழைப்பை தீவிரப்படுத்த இந்தியா வலியுறுத்தல்!
Published on

கொழும்பு,

மத்திய வெளியுறவுத்துறை மந்திரி எஸ் ஜெய்சங்கர் 5 நாள் பயணமாக மாலத்தீவு மற்றும் இலங்கை சென்றுள்ளார். இருநாட்டு உறவை வலுப்படுத்திடவும் புதிய ஒப்பந்தங்கள் குறித்து விவாதிக்கவும் உள்ளார்.

சீனாவின் ஆக்கிரமிப்பை எதிர்கொள்ள இந்தியப் பெருங்கடலில் உள்ள இரண்டு முக்கிய அண்டை நாடுகளுடன் இந்தியா தனது உறவுகளை வலுப்படுத்த விரும்புகிறது. அதன் ஒரு பகுதியக இந்த இருநாடுகளுக்குமான பயணம் பார்க்கப்படுகிறது.

அதன்படி, மாலத்தீவு பயணத்தை வெற்றிகரமக முடித்துக்கொண்டு அங்கிருந்து அவர் மூன்று நாள் பயணமாக நேற்று இலங்கை சென்றடைந்தார்.அங்கு அவருக்கு பெரும் வரவேற்பு அளிக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து, மத்திய வெளியுறவுத்துறை மந்திரி டாக்டர் எஸ் ஜெய்சங்கர் இலங்கையின் நிதித்துறை மந்திரி பசில் ராஜபக்சேவை சந்தித்தார்.

இந்த நிலையில், இன்று நடைபெற்ற 18-வது பல்துறை தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கான வங்காள விரிகுடா முன்முயற்சி(பிம்ஸ்டெக்) கூட்டத்தில் அவர் பங்கேற்றார்.

அந்த கூட்டத்தில் அவர் ஆற்றிய உரையில் தெரிவித்ததாவது;-

நம் நாடுகளுக்கிடையேயான ஒத்துழைப்பை, குறிப்பாக இணைப்பு, ஆற்றல் மற்றும் கடல்சார் ஒத்துழைப்பை தீவிரப்படுத்தவும் விரிவுபடுத்தவும் நம்முடைய அர்ப்பணிப்பு உணர்வை வலியுறுத்துகிறேன்.

வணிக ஒத்துழைப்பை ஊக்குவிப்போம். அதிலும் குறிப்பாக துறைமுக வசதிகள், படகு சேவைகள், கடலோர கப்பல் போக்குவரத்து, கட்டம் இணைப்பு மற்றும் மோட்டார் வாகனங்கள் இயக்கம் ஆகியவற்றில் ஒத்துழைப்பை ஊக்குவிப்போம்.

பயங்கரவாதம், வன்முறை தீவிரவாதம், நாடுகடந்த குற்றங்கள், சைபர் தாக்குதல்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல் ஆகியவற்றை நாம் கூட்டாக எதிர்த்துப் போராட வேண்டும்.

நாளை நடைபெறும் உச்சிமாநாட்டில் நமது சாசனம் மற்றும் முக்கிய திட்டங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் என எதிர்பார்க்கிறேன்.

இவ்வாறு அவர் உரையாற்றினார்.

மேலும், எதிர்க்கட்சிகள், தமிழ் மற்றும் முஸ்லிம் அரசியல் கட்சிகளின் முக்கிய உறுப்பினர்களுடனும் அவர் உரையாடுவார் என்று வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து, அதிலிருந்து மீள வழி தெரியாமல் திண்டாடி வரும் இலங்கைக்கு, பொருளாதார மீட்பு நடவடிக்கையாக இந்தியாவிலிருந்து தொடர்ந்து உதவி செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com