

அபுதாபி,
மேற்கு ஆசியாவில் மாறிவரும் பிராந்திய சூழல்களுக்கு மத்தியில், இந்திய அரசு வளைகுடா முழுவதும் தனது இராஜதந்திர உறவுகளை பலப்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கரின் இந்த பயணம் அமையும் என தெரிகிறது.
மொரிஷியஸில் இருந்து ஐக்கிய அரபு அமீரகம் சென்றடைந்த வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் இன்றும் (ஏப்.11) நாளையும் அபுதாபியில் தங்கி இருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருதரப்புக்கும் இடையிலான ஒத்துழைப்பை மறு ஆய்வு செய்யும் வகையிலும், இரு நாடுகளுக்கு இடையிலான இராஜதந்திர உறவை பலப்படுத்தும் வகையிலும் ஐக்கிய அரபு அமீரகத்தின் மூத்த தலைவர்களை ஜெய்சங்கர் சந்திப்பார் என தகவல் வெளியாகி உள்ளது.
இதனிடையே வளைகுடா நாடுகளில் போர் சூழல் நிலவி வந்த நிலையில், இந்தியாவின் எரிசக்தி கூட்டாண்மைகளை வலுப்படுத்தவும், நிலையான விநியோகத்தைப் பாதுகாக்கவும் பிரதமர் நரேந்திர மோடியின் வழிகாட்டுதலின் பேரில், மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு மந்திரி ஹர்தீப் சிங் பூரி ஒரே நேரத்தில் மற்ற வளைகுடா நாடுகளுக்கும் பயணம் மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.