இலங்கையில் முதல்முறையாக ஜல்லிக்கட்டு போட்டி... சீறிப்பாயும் காளைகள்...!

முதலாவதாக சம்பூர் மாரியம்மன் கோவில் காளை களத்தில் அவிழ்த்து விடப்பட்டது.
Image Credits : ANI News
Image Credits : ANI News
Published on

திரிகோணமலை,

ஒவ்வொரு வருடமும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான முதல் ஜல்லிக்கட்டு போட்டி இன்று புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் தமிழகத்தை தொடர்ந்து வரலாற்றில் முதல்முறையாக இலங்கையில் ஜல்லிக்கட்டு போட்டி இன்று நடைபெற்று வருகிறது. கடந்த ஆண்டு திருச்சி வந்த போது இலங்கை கிழக்கு மாகாண கவர்னர் செந்தில் தொண்டமான், இலங்கையில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த ஏற்பாடுகள் செய்யப்படும் எனக் கூறியிருந்தார்.

அதன்படி இன்று திரிகோணமலை, சம்பூர் பகுதியில் உள்ள மைதானத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது. செந்தில் தொண்டமான் தலைமையில் சுற்றுலா துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த போட்டியில் 300க்கும் மேற்பட்ட காளைகள், 150 மாடுபிடி வீரர்கள் பங்கேற்று உள்ளனர். இதில் 50 வீரர்கள் தமிழகத்தை சேர்ந்தவர்கள்.

இலங்கை வரலாற்றில் முதன்முறையாக நடத்தப்படும் இந்த ஜல்லிக்கட்டு போட்டியை செந்தில் தொண்டமான் மற்றும் மலேசியா எம்.பி. டத்தோ ஸ்ரீ முருகன் சரவணன் கொடியசைத்து துவக்கி வைத்தனர். இலங்கை அமைச்சர்கள், எம்.பி.க்கள் மற்றும் தமிழ்நாட்டை சேர்ந்த நடிகர் நந்தா உள்ளிட்டோர் பார்வையிட்டு வருகின்றனர்.

முதலாவதாக சம்பூர் மாரியம்மன் கோவில் காளை களத்தில் அவிழ்த்து விடப்பட்டது. தொடர்ந்து விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இந்த போட்டியில் வாடிவாசலில் இருந்து சீறிப்பாயும் காளைகளை அடக்கும் வீரர்களுக்கு மின்விசிறி, ரைஸ் குக்கர் உள்ளிட்ட பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றன. சிறந்த மாடுபிடி வீரர்கள் மற்றும் மாடுக்கு ரூ. 1 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com