ரத்ததானம் செய்து 24 லட்சம் குழந்தைகளின் உயிரை காப்பாற்றிய ஜேம்ஸ் ஹாரிசன் காலமானார்


ரத்ததானம் செய்து 24 லட்சம் குழந்தைகளின் உயிரை காப்பாற்றிய ஜேம்ஸ் ஹாரிசன் காலமானார்
x

கோப்புப்படம்

தினத்தந்தி 4 March 2025 4:29 PM IST (Updated: 4 March 2025 5:44 PM IST)
t-max-icont-min-icon

தனது 18 வயதில் இருந்து ரத்த தானம் செய்ய துவங்கி 60 ஆண்டுகளுக்கும் மேலாக, ரத்த தானம் செய்து ஜேம்ஸ் ஹாரிசன் சாதனை படைத்துள்ளார்.

சிட்னி,

ரத்த தானத்தின் மூலம் சுமார் 24 லட்சம் குழந்தைகளின் உயிரை காப்பாற்றிய 'தங்கக் கை மனிதர்' (Man with the golden arm) என அறியப்பட்ட ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஜேம்ஸ் ஹாரிசன் (88) காலமானார்.

தனது 18 வயதில் இருந்து 81 வயது வரை 1,173 முறை இவர் ரத்த தானம் செய்துள்ளார். ஜேம்சின் பிளாஸ்மாவில் Anti-D எனப்படும் அரியவகை ஆன்டிபாடி இருந்துள்ளது. இது பிரசவத்தின்போது தாயிடம் இருந்து குழந்தைகளுக்கு பரவும் தீங்கு விளைவிக்கும் ஆன்டிபாடிகளை தடுக்க உதவி உள்ளது.

ஜேம்ஸ் ஹாரிசனுக்கு 14 வயதில், நடத்தப்பட்ட ஆபரேஷனின்போது, அவருக்கு ஒரு நுரையீரல் அகற்றப்பட்டிருந்தது. இந்த ஆபரேஷனுக்காக, ஹாரிசனின் உடலில், முகம் தெரியாத பலர் அளித்த 13 யூனிட்கள் ரத்த தானம் மூலம் உயிர் பிழைத்தார். தான் உயிர் பிழைத்ததற்கு நன்றி கடனாக அப்போதே, ரத்த தானம் செய்வதில் விருப்பம் கொண்டிருந்தார்.

இந்த சூழலில் ஆஸ்திரேலியாவில், ரீசஸ் நோயினால் பச்சிளம் குழந்தைகள் அதிகம் மரணமடைந்து வந்தனர். இந்த நோய்க்கு தீர்வு ஏற்பட Anti-D என்ற ஆன்டிபாடி அவசியமானதாக கூறப்பட்டது. இதனிடையே, ஹாரிசனின் ரத்த பிளாஸ்மாவில், இந்த Anti-D ஆன்டிபாடி இருப்பது கண்டறியப்பட்டது. இதனையடுத்து தனது 18 வயதில் இருந்து ரத்த தானம் செய்ய துவங்கி 60 ஆண்டுகளுக்கும் மேலாக, ரத்த தானம் செய்து ஜேம்ஸ் ஹாரிசன் சாதனை படைத்துள்ளார்,

இவரது இந்த செயற்கரிய செயலின் மூலம், சுமார் 24 லட்சம் பச்சிளம் குழந்தைகளின் உயிரை அவர் காப்பாற்றி உள்ளதாக அறிவிக்கப்பட்டது. தனது 81 வயது வரை ஒவ்வொரு இரண்டு வாரங்களுக்கும் ஒருமுறை ஜேம்ஸ் ஹாரிசன் இதனை செய்து வந்துள்ளார் கடந்த சில ஆண்டுகளாக ரத்த தானம் அளிப்பதை ஜேம்ஸ் ஹாரிசன் நிறுத்தினார். உடல் நலக்குறைவால் நியூசவுத்வேல்ஸ் மாகாணத்தில் குடும்பத்துடன் வசித்து வந்த நிலையில் கடந்த பிப். 17-ம் தேதியன்று தனது தூக்கத்திலேயே இயற்கை எய்தியதாக அவரது குடும்பத்தினர் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

Anti-D தடுப்பூசிகள்

Anti-D தடுப்பூசிகள் கருவில் உள்ள மற்றும் புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கு வரும் ஹீமோலிடிக் நோய் அல்லது HDFN எனப்படும் ஆபத்தான ரத்தக் கோளாறிலிருந்து பாதுகாக்கின்றன. இந்த நோய் கர்ப்ப காலத்தின் போது வருகிறது. தாயின் ரத்த சிவப்பணுக்கள் கருவில் வளரும் குழந்தையின் ரத்த சிவப்பணுக்களுடன் பொருந்தாத போது இந்த நோய் பாதிப்பு ஏற்படுகின்றது.

தாயின் நோய் எதிர்ப்பு அமைப்பு குழந்தையின் ரத்த அணுக்களை அச்சுறுத்தலாகக் கருதி அவற்றைத் தாக்க ஆன்டிபாடிகளை உருவாக்குகிறது. இது கருவில் உள்ள குழந்தைக்கு கடுமையான தீங்கு விளைவிக்கக் கூடும். இதனால் குழந்தைக்கு கடுமையான ரத்த சோகை, இதய செயலிழப்பு அல்லது மரணம் கூட ஏற்படலாம். 1960-களில் anti-D தடுப்பூசிகள் உருவாக்கப்படுவதற்கு முன்பு, HDFN நோயால் பாதிக்கப்பட்ட இரண்டு குழந்தைகளில் ஒன்று உயிரிழந்தது.

ஜேம்ஸ் ஹாரிசனின் ரத்தத்தில் anti-D ஆன்டிபாடி எவ்வாறு இவ்வளவு அதிகமாக இருந்தது என்பது குறித்து தெளிவாக தெரியவில்லை. 14 வயதில் அவருக்கு அதிக அளவில் ரத்த மாற்றம் செய்யப்பட்டதால் இதுபோல நடந்திருக்கக் கூடும் என்று சில அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

1 More update

Next Story