ஜப்பானில் கனமழையால் வெள்ளம்: 200 பேர் பலி

ஜப்பானில் கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் சிக்கி சுமார் 200 பேர் பலியாகியுள்ளனர்.
ஜப்பானில் கனமழையால் வெள்ளம்: 200 பேர் பலி
Published on

டோக்கியோ,

ஜப்பான் நாட்டில் 1982-ம் ஆண்டு பலத்த மழை பெய்து, அதனால் ஏற்பட்ட வெள்ளத்தால் கடும் சேதம் ஏற்பட்டது. அதேபோல் 36ஆண்டுகளுக்கு பிறகு இப்போதும் அங்கு மிக பலத்த மழை கொட்டுகிறது. இதனால் ஜப்பானில் பெரும் பகுதி வெள்ளத்தில் மூழ்கி கிடக்கிறது. ஒகாயமா, ஹிரோஷிமா, யாமாகுச்சி பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதில், ஒகாயமா பகுதி முழுவதும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. பெரும்பாலான இடங்களில் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்து இருக்கிறது. பல வீடுகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுள்ளன.

இதனால் மக்கள் அங்கு வசிக்க முடியாமல் வெளியேறி வருகிறார்கள். இதுவரை 86 லட்சம் பேர் வெளியேறி உள்ளனர். அவர்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். வெள்ள நிலைமை தொடர்ந்து மோசமாகி வருகிறது. பெரும்பாலான சாலைகளை வெள்ளம் அடித்து சென்று விட்டது. மேலும் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டும் சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன.

இதனால் போக்குவரத்து முற்றிலும் முடங்கி உள்ளது. மின் கம்பங்களும் சாய்ந்து விட்டன. இதன் காரணமாக பல பகுதிகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு இருக்கிறது. வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்பதற்காக மீட்பு படையினர், ராணுவத்தினர் 70 ஆயிரம் பேர் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். சாலைகள் துண்டிக்கப்பட்டு இருப்பதால் மீட்பு பணி செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

மழைக்கு இதுவரை 199 பேர் பலியாகி இருக்கிறார்கள். 12 க்கும் மேற்பட்டவர்களை காணவில்லை. அவர்களும் பலியாகி இருக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. வெள்ள நிலைமை மிக மோசமாக இருப்பதால் பிரதமர் ஷின்சோ அபே தனது வெளிநாட்டு பயணத்தை ரத்து செய்துள்ளார். அவர், பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு நிவாரண பணிகளை முடுக்கி விட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com