ஆப்பிரிக்க நாடுகளின் வளர்ச்சிக்கு ரூ.2.39 லட்சம் கோடி முதலீடு செய்ய ஜப்பான் முடிவு

ஆப்பிரிக்க நாடுகளின் வளர்ச்சிக்காக அடுத்த 3 ஆண்டுகளில் ரூ.2.39 லட்சம் கோடியை முதலீடு செய்ய ஜப்பான் அரசு முடிவு செய்து உள்ளது.
ஆப்பிரிக்க நாடுகளின் வளர்ச்சிக்கு ரூ.2.39 லட்சம் கோடி முதலீடு செய்ய ஜப்பான் முடிவு
Published on

டோக்கியோ,

ஆப்பிரிக்க வளர்ச்சிக்கான 8-வது டோக்கியோ சர்வதேச மாநாடு துனிசியா நாட்டில் கடந்த ஆகஸ்டு 25-ந்தேதி முதல் 29-ந்தேதி வரை நடைபெறுகிறது. இதில் ஜப்பானிய பிரதமர் புமியோ கிஷிடா ஆன்லைன் வழியே கலந்து கொண்டு உரையாற்றினார்.

அவர் பேசும்போது, மனித வளங்களில் முதலீடு, வளர்ச்சிக்கான தரம் ஆகிய துறைகளில் ஜப்பான் அரசு பெரும் கவனம் செலுத்துகிறது. ஆகையால் ஜப்பான் அரசு மற்றும் வர்த்தகர்கள் கூட்டாக, ஆப்பிரிக்க நாடுகளின் வளர்ச்சிக்கு அடுத்த 3 ஆண்டுகளுக்கு ரூ.2.39 லட்சம் கோடியை முதலீடு செய்ய முடிவு செய்து உள்ளோம்.

ஆப்பிரிக்கா ஓர் இளமையான, நம்பிக்கையான மற்றும் பன்முக தன்மை கொண்ட கண்டம். ஆப்பிரிக்காவுடன் இணைந்து வளர்ச்சி அடைவதற்கான ஒரு நட்பு நாடாக மாற ஜப்பான் விரும்புகிறது என்று பிரதமர் கிஷிடா கூறியுள்ளார்.

நிதி முதலீட்டின் ஒரு பகுதியாக, பசுமை தொழில் நுட்பங்களின் வளர்ச்சிக்காக ரூ.31,980 கோடி செலவிடப்படும். ஆப்பிரிக்க நாடுகள் கடன் நிலையில் இருந்து மேம்படுவதற்கான சீர்திருத்தங்களுக்கு ரூ.39,980 கோடி நிதி செலவிடப்படும்.

ஸ்டார்ட்-அப்களுக்கு ஆதரவாக, 3 லட்சம் பேரை தொழில் துறை, சுகாதார நலம், கல்வி மற்றும் வேளாண்மை ஆகிய துறைகளில் நிபுணர்களாக ஆக்குவதற்கான பயிற்சிகளை வழங்குவதற்கும் இந்த நிதி செலவிடப்படும் என கூறியுள்ளார்.

ஆப்பிரிக்க நாடுகளின் உணவு உற்பத்தி திட்டத்திற்கு வலு சேர்க்கும் வகையில், ரூ.2,399 கோடி கடனாக வழங்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com