புகுஷிமாவில் இருந்து 13 லட்சம் லிட்டர் அணுக்கதிர் கழிவுநீரை கடலில் கலக்க ஜப்பான் அரசு முடிவு

புகுஷிமாவில் அணு உலையில் இருந்து 13 லட்சம் லிட்டர் கழிவுநீரை கடலில் கலக்க முடிவு செய்துள்ளதாக ஜப்பான் அரசு கூறியுள்ளது.
புகுஷிமாவில் இருந்து 13 லட்சம் லிட்டர் அணுக்கதிர் கழிவுநீரை கடலில் கலக்க ஜப்பான் அரசு முடிவு
Published on

டோக்கியோ,

ஜப்பான் நாட்டில் கடந்த 2011-ம் ஆண்டு சுனாமி பேரலையின் தாக்குதல் காரணமாக, புகுஷிமா அணு உலையில் கடும் சேதம் ஏற்பட்டது. இதனால் காற்றில் கதிர்வீச்சு பரவி விடாமல் தடுக்க, லட்சக்கணக்கான டன் தண்ணீரை பயன்படுத்தி அணு உலையின் வெப்பத்தையும் கதிர்வீச்சையும் குறைத்தனர்.

இதில் குறைவான கதீர்வீச்சு கொண்ட நீர் பசிபிக் பெருங்கடலுக்குள் சென்றது. அதிக கதீர்வீச்சு கொண்ட தண்ணீர் அணு உலை வளாகத்திலேயே தொட்டிகளில் சேமித்து வைக்கப்பட்டது. அப்படியாக இதுவரை 13 லட்சம் டன் தண்ணீர் அந்த வளாகத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் சேமித்து வைக்கப்பட்டுள்ள புகுஷிமா உலையின் அணுக்கதிர் கழிவுநீரை பசிபிக் பெருங்கடலில் கலக்க முடிவு செய்துள்ளதாக ஜப்பான் அரசு அறிவித்துள்ளது. புகுஷிமா அணு உலையை மீண்டும் புதுப்பிக்க இந்த தண்ணீரை வெளியேற்ற வேண்டியது அவசியம் என்று ஜப்பான் பிரதமர் யோஷிஹைடே சுகா தெரிவித்துள்ளார்.

சேமித்து வைக்கப்பட்டுள்ள நீரில் உள்ள அதிகளவு கதிர்வீச்சு அகற்றப்பட்ட பிறகே கடலுக்குள் செலுத்தப்படும் என ஜப்பான் அரசு கூறினாலும், அதிலுள்ள ட்ரிட்டியத்தை முழுமையாக அகற்றுவதற்கான தொழில்நுட்பம் உலக நாடுகளிடம் தற்போது இல்லை என்று கூறப்படுகிறது. மேலும் திட்டமிட்டபடி இதனை செய்து முடிக்க குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் ஆகும் என ஜப்பான் அரசு தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com