2011-ம் ஆண்டு சுனாமியில் உருக்குலைந்த புகுஷிமா அணு உலை கழிவு நீரை கடலில் திறந்துவிடுகிறது ஜப்பான்..!

2011-ம் ஆண்டு சுனாமியில் உருக்குலைந்த புகுஷிமா அணு உலை கழிவு நீரை பசிபிக் பெருங்கடலில் ஜப்பான் திறந்து விட உள்ளது.
image courtesy: AFP
image courtesy: AFP
Published on

டோக்கியோ,

ஜப்பானில் கடந்த 2011-ம் ஆண்டு மார்ச் 11-ந் தேதி சுனாமி தாக்கியபோது உலகிலேயே பாதுகாப்பான அணு உலையாகக் கருதப்பட்ட புகுஷிமாவின் டாய்ச்சி அணு உலைக்குள் கடல்நீர் புகுந்தது. இதில் மின்சாரம் உற்பத்தி செய்யும் ஜெனரேட்டர்கள் செயலிழந்து உலைகளை குளிர்விக்க மின்சாரம் இல்லாமல் போனது.

இதனால் 6 யூனிட்களில் 3 யூனிட்கள் சேதம் அடைந்தன. இதனால் சுற்றியுள்ள பகுதிகளில் கதிர்வீச்சு தாக்கியது. 10 ஆண்டுகள் கடந்தும் மக்கள் வசிக்க முடியாத அளவிற்கு கதிர்வீச்சின் தாக்கத்தை இன்னமும் கக்கிக் கொண்டிருக்கிறது அந்த உலை. இதனிடையே புகுஷிமா அணு உலையில் உள்ள அணு கழிவுகளை பாதுகாப்பாக அகற்றிவிட்டு அந்த அணுஉலையை முழுமையாக செயலிழக்கச் செய்யும் பணிகளில் டெப்கோ என்ற நிறுவனம் ஈடுபட்டுள்ளது.

அந்த வகையில் புகுஷிமா அணு உலையில் அணு கழிவுகள் நிறைந்த சுமார் 1 லட்சத்து 25 ஆயிரம் டன் கழிவுநீர் முற்றிலுமாக சுத்திகரிக்கப்பட்டு ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொட்டிகளில் பாதுகாப்பாக சேகரித்து வைக்கப்பட்டுள்ளன. அணு கழிவுகள் அகற்றப்பட்ட இந்த கழிவு நீரை கடலில் திறந்துவிடும் திட்டத்தை ஜப்பான் அரசு நீண்டகாலமாக பரிசீலித்து வருகிறது.

ஆனால் இந்த திட்டத்துக்கு மீனவர்களும், சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் அணு கழிவுகள் அகற்றப்பட்ட கழிவு நீரை கடலில் திறந்துவிடும் திட்டத்துக்கு ஜப்பானின் அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையம் ஒப்புதல் வழங்கியுள்ளது.

பாதிக்கப்பட்ட ஆலையில் இருந்து சுமார் 1 கி.மீ. தொலைவில் உள்ள பசிபிக் பெருங்கடலில் கடலுக்கு அடியில் ஒரு சுரங்கப்பாதை மூலம் கழிவு நீரை வெளியேற்றுவது அரசின் திட்டம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் தொடங்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com