

மும்பை,
இந்தியாவின் உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டங்களுக்கு தேவையான நிதி உதவியினை ஜப்பான் முன்பிருந்தே வழங்கி வருகிறது. ஆசிய அளவில் இந்தியா மற்றும் ஜப்பான் ஆகிய இரு நாடுகளும் கலாசாரம், வர்த்தகம் மற்றும் கல்வி போன்ற பல்வேறு துறைகளில் தங்களுக்கிடையே பரிமாற்றங்களை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், இந்தியாவுக்கான ஜப்பான் தூதர் ரியோஜி நோடா செய்தியாளர்களிடம் பேசும்பொழுது, பல்வேறு துறைகளிலும் இந்தியா தனது 21ம் நூற்றாண்டின் இலக்குகளை அடைவதற்கு ஆதரவு அளிக்க ஜப்பான் தயாராக உள்ளது என கூறினார்.
இரு நாடுகளுக்கும் இடையேயான உறவை பலப்படுத்துவதற்காக வருடந்தோறும் நமது பிரதமர்களின் சந்திப்பு நடைபெறுகிறது. இதன் தொடக்கமாக ஜப்பான் பிரதமர் ஷின்ஜோ அபே இந்த வருட இறுதியில் இந்தியாவிற்கு வருகை தருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த 2014ம் ஆண்டில் இரு நாட்டு பிரதமர்களின் சந்திப்பில், இந்தியாவில் ஜப்பானின் அந்நிய நேரடி முதலீட்டை 2 மடங்காக்க முடிவு செய்யப்பட்டது. அதனால் 5 வருட கால அளவில் ரூ.2.1 லட்சம் கோடி அளவிற்கு இந்தியாவில் முதலீடு செய்யப்படும்.
மும்பை மற்றும் அகமதாபாத் நகரங்களுக்கு இடையே அதிவிரைவு ரெயில் திட்டம் (புல்லட் ரெயில்) அமைப்பதற்கு ரூ.1.2 லட்சம் கோடியை ஜப்பான் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது என்றும் அவர் கூறியுள்ளார்.